Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/14/2018

எல்கேஜி, யூகேஜி.. இனி அரசுப் பள்ளிகளில்...


தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்படுவது குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ என்ற தலைப்பில் மலேசியத் தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிமுகாமை நேற்று (மார்ச் 12) சென்னையில் தொடங்கி வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த முகாம், மலேசியா மற்றும் தமிழக அரசால் இணைந்து நடத்தப்படுகிறது. இதில் 47 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் 10 தமிழ் ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த முகாமைத் தொடங்கிவைத்துப் பேசிய செங்கோட்டையன், “இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அரசுகளோடு இணைந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.“மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா என்ற நான்கு நாடுகளிலுள்ள குழுக்களை இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறதோ, அதைப் பூர்த்தி செய்வதற்கும், முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் குடியேறிய தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்றுக்கொடுப்பதற்கும், அதற்கு வேண்டிய நூல்களை வழங்குவதற்கும் முனைப்பாகப்பணிகள் மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், புதிதாக 25 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்கும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கப்படவிருப்பதாகத் தெரிவித்தார்செங்கோட்டையன்.

‘அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் வரும் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்படுமா?’ என்ற கேள்விக்கு, “முதலமைச்சருடன் அதுபற்றி பேசியிருக்கிறோம். அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு அதற்கான முன்வரைவு தயார் செய்யப்படும்” என்று பதிலளித்தார்.நீட் தேர்வைப் பொறுத்தவரை, அதற்குத் தமிழகத்தில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றே அரசு விரும்புவதாகக் குறிப்பிட்டார் செங்கோட்டையன். “நீட் தேர்வு எழுதியாக வேண்டிய நிலையில், தனியாரிடத்தில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை மாணவர்கள் மத்தியில் உள்ளது.

அதை முன்னிட்டு 72 ஆயிரம் மாணவர்களுக்கு இணையம் வழியே பயிற்சியளிக்க உள்ளோம். இப்போதுவரை, இதில் 70,412 மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். பொதுத் தேர்வு முடிந்தவுடன் அவர்களுக்கு மடிக்கணினிவழங்கப்பட்டு, பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதோடு புத்தகங்களும் வழங்கப்படும்.இந்த மாணவர்களுக்குத் தனியாக ஒரு தேர்வு வைக்கப்பட்டு, அதன் மூலமாக 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 25 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தியாவே வியக்கும் அளவுக்கு, அந்தப் பயிற்சி அமையும்” என்று தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்து விவரித்தார்.கல்விச் சுற்றுலாவைப் பொறுத்தவரை, 100 மாணவர்களுக்கு ஓராண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை தமிழக அரசு செலவு செய்யும் என்றும், இவர்கள் நான்கு குழுக்களாக, 13 நாடுகளுக்குச் செல்வார்கள் என்றும், ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக 4 அல்லது 5 நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அந்நாடுகளில் உள்ள அறிவியல், தொழில், கலாசாரம், பண்பாடு பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்றும் செங்கோட்டையன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"