Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/08/2018

இந்த பெண்ணின் கதை கேட்டால் உங்களுக்கு...


மைசூரைச் சேர்ந்த செல்வி, தென்னிந்தியாவின் முதல் வாடகை கார் பெண் ஓட்டுநர். செல்வியின் 14 வயதிலேயே அவருக்குத் திருமணம் நடந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவரால் தினமும் சித்ரவதையை அனுபவித்தார் செல்வி.
ஒருநாள் இரவு வீட்டில் செல்வி உறங்கிக்கொண்டிருந்தபோது, கணவர் குடித்துவிட்டு வந்து கதவைத் தட்டினார். கதவைத் திறந்த செல்விக்குப் பேரதிர்ச்சி! கணவர் உடன் இன்னொருவர் வந்திருந்தார். செல்வியின் கணவரே, இன்னோர் ஆணுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள கூறி அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார். துன்புறுத்தல் தினமும் தொடர்ந்தது!

தீர்க்கமான முடிவுக்கு வந்த செல்வி, கணவரை கைகழுவினார். வீட்டிலிருந்து வெளியேறி, ஆதரவற்றப் பெண்கள் இல்லமான ஓடானாடியில் போய்ச் சேர்ந்தார். அப்பாது செல்விக்கு 18 வயது. மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து இருந்தார். அங்கே இருந்த சகபெண்கள், செல்விக்கு ஆதரவாக இருந்தாலும், `வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமோ!' என்ற கவலை, அவரை வாட்டியது.
இல்லத்தில் தங்கியிருந்த இரு பெண்கள், டிரைவிங் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தனர். செல்விக்கு `நாமும் டிரைவிங் பயின்று ஓட்டுநர் ஆனால் என்ன?' என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. கணவரிடமிருந்து தப்பித்தால்போதும் என்று நினைத்த செல்விக்கு, வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

டிரைவிங் நுணுக்கங்களைப் படிப்படியாகக் கற்றுத்தேர்ந்து, மிகச்சிறந்த ஓட்டுநர் ஆனார் செல்வி. `ஓடானாடி' அமைப்பு, செல்விக்கு மாருதி வேன் ஒன்றை வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தியது. செல்வியின் வாடகை கார் பெங்களூரில் ஓடத் தொடங்கியது. `தென்னிந்தியாவின் முதல் பெண் வாடகை கார் ஓட்டுநர்' என்ற பெருமையும் கிடைத்தது. படிப்படியாக முன்னேறி, சொந்தமாக வாடகை கார் நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு செல்வி முன்னேறினார். 
செல்வியின் மனதைப் புரிந்துகொண்ட விஜி என்கிற இளைஞர் அவரை மறுமணம் செய்துகொள்ள, சந்தோஷமான மணவாழ்க்கை கிடைத்தது. செல்வியின் வாழ்க்கை, கணவர், குழந்தைகள், தொழில்முனைவேர் என சந்தோஷமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

ஏதோ... சோகத்தில் தொடங்கி சந்தோஷத்தில் கதை முடிந்தது எனக் கருதிவிட வேண்டாம். இனிமேல்தான் செல்வியின் கதையே வேறு கோணத்தில் பயணிக்கிறது. கனடாவைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் எலிசா பாலோஸிச்சி, 2015-ம் ஆண்டில் `டிரைவிங் வித் செல்வி' என்ற பெயரில் செல்வி பற்றி ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார். அதில், செல்வியின் பால்ய விவாகம், துயரங்கள், வேதனைகள், வறுமையை ஜெயித்தது, மீண்டும் ஒரு காதல்... என மிக தத்ரூபமாக படம் எடுத்திருந்தார் எலிசா.

`யுனிசெஃப்' அமைப்பின் அறிக்கையின்படி, உலகில் ஏழு கோடி பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் முடிந்துவிடுகிறது. 2.5 கோடி பேருக்கு 15 வயதுக்குள் திருமணமாகிறது. செல்வி வழியாக உலக மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எலிசாவின் நோக்கம். `டிரைவிங் வித் செல்வி' ஆவணப்படம், காண்போர் மனதைப் பிசைந்தது. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் டொரான்டோ நகரில் நடந்த 19-வது ஆசிய சர்வதேசத் திரைப்பட விழாவில் `டிரைவிங் வித் செல்வி' திரையிடப்பட்டு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 18 நிமிடத்தில் செல்வியின் வாழ்க்கையை அத்துணை தத்ரூபமாகச் சொல்லியிருந்தார் எலிசா.

இந்த ஆவணப்படம், செல்வியை உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியது. பெண்கள் தொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படுத்த, பல நாடுகளிலிருந்தும் அவருக்கு அழைப்பு வரத் தொடங்கியது. இப்போது செல்விக்கு நிற்கக்கூட நேரமில்லை. நியூயார்க், லண்டன் எனப் பறந்துகொண்டே இருக்கிறார். `டிரைவிங் வித் செல்வி' ஆவணப்படம், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊர் ஊராகச் சென்று திரையிடப்படுகிறது. லட்சக்கணக்கானோர் இந்த ஆவணப்படத்தைக் கண்டுள்ளனர். பால்ய விவாகம் அதிகம் நடைபெறும் வடமாநிலம் முழுவதும் செல்வியும் எலிசாவும் சுற்றுப்பயணம் செய்து, இந்தப் படத்தைத் திரையிட்டுள்ளனர்.

பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் செல்விக்கு, மத்திய அரசு `first lady' விருது அறிவித்திருந்தது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், செல்விக்கு விருது வழங்கி கௌரவித்தார். இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் 112 பெண்கள், இந்த விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். ஐஸ்வர்யா ராய், ஏவுகணைப் பெண் டெய்சி தாமஸ் இவர்களில் செல்வியும் ஒருவர்.
இப்ப சொல்லுங்க இந்த செல்வியின் கதை உங்களுக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியது?

 
மகளிர் தின வாழ்த்துக்கள்....

Selvi receives WCD First Lady Achievement award from President.
 இந்த கட்டுரையை எழுதியவர் எம். குமரேசன்.

1 comments:

  1. மகளிர் தினத்தில் பொருத்தமான பதிவு. நல்ல வேளை நல்ல நிலைமைக்கு வந்தபின் கணவனோடு சேர்ந்து வாழாமல் போனாங்களே!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"