Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/13/2018

கோடை காலத்துக்கேற்ற உணவுகள்


`கோடை தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கின்றன. இரவு முழுக்கப் பனியின் தாக்கம் குளிர்ச்சியானச் சூழலை ஏற்படுத்தினாலும், பகலில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்தச் சூழலில் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடலாம்... எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொண்டு, அதன்படி சாப்பிடவேண்டியது மிக அவசியம்''

`கோடை காலத்தில் ஏற்படும் தட்பவெப்பநிலையின் காரணமாக நம் உடலிலும் வெப்பம் அதிகரித்துவிடும். எனவே, அதற்கேற்ற உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும். சிலவற்றை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் அதிக தாகம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரகக்கல் பிரச்னை, ஆசனவாயில் எரிச்சல், மூலம், வயிற்றுவலி, மலச்சிக்கல், மெட்ராஸ்-ஐ உள்ளிட்ட கண் நோய்கள், அம்மை... என ஏராளமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், கோடை காலத்தில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இவை மட்டுமல்லாமல் இயற்கை பானங்களைச் சாப்பிடுவதும் நல்லது.

மிக எளிதாகக் கிடைக்கும் தண்ணீர். குழந்தைகளும் மிகவும் வயதானவர்களும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தலாம். மற்றவர்கள் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் என்றால், `குளிர்ச்சியான நீர்’ என்று பொருள். எனவே வெயில் காலத்தில் குளிர்ச்சியான நீரைத்தான் குடிக்க வேண்டும். அதற்கு, மண்பானையில் ஊற்றி குளிர்விக்கப்பட்ட நீரை அருந்தலாம். மண்பானை நீரில் நன்னாரி, வெட்டிவேர், விலாமிச்சை வேர் போன்ற மூலிகைகளைப் போட்டுவைத்துக் குடிக்கலாம். இது குடல், வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்க உதவும். தொடர்ந்து குடித்து வந்தால், இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.

பலர் கோடையில் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் நீரைக் குடிப்பார்கள். அது நல்லதல்ல. ஃப்ரிட்ஜிலிருக்கும் குளிர்ந்த நீர் செயற்கையாகக் குளிர்விக்கப்பட்டது என்பதால், அது உடலில் வெப்பத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வெயிலில் அலைந்து திரிந்து வந்ததும், உடனே தண்ணீர் அருந்துவதும் சரியானதல்ல. தகிக்கும் சூட்டுடனிருக்கும் உடலில் குளிர்ந்த நீர் படுவதால் தலைவலி, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு தண்ணீர் குடிப்பதே நல்லது.

கோடை காலத்தில் `ஜில்’லென்று சாப்பிட வேண்டும் என நினைத்துக்கொண்டு ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், தயிர், பால், சீஸ் போன்றவற்றைச் சாப்பிடுவார்கள். இவை எல்லாமே குளிர்ச்சியைத் தருவதற்குப் பதிலாக உடலில் வெப்பத்தையே ஏற்படுத்தும். எனவே, இவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். தயிருக்குப் பதிலாக அதை மோராக்கி குடிக்கலாம். மோரில் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. நீராகாரம், பழைய கஞ்சி, கேழ்வரகு கூழ் போன்றவற்றைச் சாப்பிடுவது சூடு தணிக்க உதவும்.

கோடை காலத்தில் விளையும் பழங்களைச் சாப்பிட்டால், உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ள முடியும். தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், முலாம்பழம், கிர்ணிப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களைச் சாப்பிடலாம். இவற்றை ஜூஸாக்கியும் குடிக்கலாம். தர்பூசணிப் பழம் குளிர்ச்சியூட்டக்கூடியது என்றாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. தர்பூசணியுடன் இளநீர் சேர்த்து ஜூஸாக்கிக் குடிப்பது நல்லது.

எலுமிச்சை ஜூஸ், புதினா ஜூஸ் போன்றவற்றை அதிகச் செலவில்லாமல், நாமே தயாரித்து அருந்தலாம். எலுமிச்சைச் சாற்றுடன் தண்ணீர், இனிப்பு சேர்ப்பதுடன் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம். இதேபோல் கைப்பிடி புதினாவுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, நீர்விட்டு, வடிகட்டி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பதும் உடல் சூட்டைத் தணிக்க உதவும். கோடையில் கிடைக்கும் மாம்பழம் உடலுக்கு நல்லதுதான். ஆனால் அதிகமாகச் சாப்பிட்டால் உடலில் சூட்டை அதிகரித்து வயிற்றுப் பிரச்னைகளை உண்டாக்கும். எனவே, அளவுடன் சாப்பிடுவது நல்லது.

பகல் உணவில் சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க்காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை நன்றாகச் சிறுநீர் பிரிய உதவும்; சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும். வாழைத்தண்டு ஜூஸ், பொரியல், கூட்டு செய்து சாப்பிடுவது, கோடை காலத்தில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். எள்ளு மிட்டாய், எள்ளுத் துவையல் சாப்பிடலாம். சின்ன வெங்காயம், கருணைக்கிழங்கு மசியல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் ஆசனவாயில் எரிச்சல், மூலம் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

மூலம், சிறுநீர் பிரச்னை, அடிவயிற்றுப் பிரச்னைகள் வராமலிருக்க, வெந்தயத்தை முளைகட்டியோ, நீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். நுங்கு, பதநீர் போன்ற இயற்கை பானங்களை அருந்தலாம். கைப்பிடிப் புளியை ஊறவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்தால் கிடைக்கும் பானகத்தை பகல் வேளைகளில் அருந்தலாம். இரவில் கசகசாவை மையாக அரைத்து, பாலுடன் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பது சூட்டைத் தணிக்கும்; இரவில் நிம்மதியான உறக்கத்தைத் தரும். கற்றாழை ஜூஸ் அருந்தினால், அதிகச் சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

நல்லெண்ணெயில் மிளகு, சீரகம், பூண்டுப்பல், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்துக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிப்பது உடல் சூட்டைத் தணிக்கும். உடல் முழுக்க இல்லையென்றாலும் உச்சந்தலை, கைகால் பெருவிரல்களில் மட்டும் தேய்த்துக் குளித்தாலும் சூடு தணியும். சூடு பிடித்துக்கொண்டு அடிவயிற்றில் வலி எடுக்கும்போது உச்சந்தலை, தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெயை வைத்தால் பிரச்னை சரியாகும்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"