Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/19/2018

தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...


தேர்வுக்கு கொடுக்கப்படும் பலவிதமான ஆலோசனைகளையும், அடுக்கடுக்கான அறிவுரைகளையும் பார்க்கும்போது சிலருக்கு எரிச்சல் வரலாம்.
நாம் என்ன போர்க்களத்திற்கா செல்கிறோம்? நமக்கென்ன உயிரா போகப்போகிறது? என்று அவர்கள் சலித்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் ஒருவகையில் போர்க்களம் போன்றதுதான்.

அங்கே நமது உயிரெல்லாம் போகாது. ஆனால், பலருக்கு, நினைத்த வாழ்க்கைப் போய்விடுகிறது. தேர்வில் மதிப்பெண் குறைவதின் மூலம், நினைத்த உயர்கல்விக்கு செல்ல முடியாமல், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, வாழ்வில் தங்களின் பிடிப்பையே இழக்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல் மற்றும் வேறுசில துறை படிப்புகளுக்கு மட்டுமல்ல, இன்றைய நிலையில், எந்த துறையை எடுத்துப் படிக்க வேண்டுமானாலும், (அதாவது இந்தியாவில் வேலை வாய்ப்பை வழங்கும் துறை மற்றும் உலகளவில் அதிகளவு பணி வாய்ப்பைக் கொண்டுள்ள துறைகள்) விரும்பிய கல்லூரிகளில் சேர வேண்டுமெனில், மதிப்பெண்ணே அடிப்படை தகுதியாக இருக்கிறது.

ஒரு மாணவர், எந்தளவிற்கு திறமை வாய்ந்தவர் என்பதையெல்லாம், விரிவான முறையில் ஆய்வுசெய்யும் வகையில், நமது பள்ளிக் கல்விமுறை கிடையாது. மதிப்பெண் மட்டுமே அறிவு மற்றும் தகுதியை மதிப்பிடுவதற்கான ஒரு அளவீடாக உள்ளது.

இன்றைய நிலையில், தேர்வில் முதல் மதிப்பெண் அல்லது அதிக மதிப்பெண் வாங்க வைப்பதென்பது, பெரும் வணிக நடவடிக்கையாகவே மாறிவிட்டது. களத்தில் நிற்கும் பல தனியார் பள்ளிகள், தங்களின் மாணவர்களை, மாநில முதல் மதிப்பெண் பெற வைப்பதற்கு, பல்வேறான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. (அவற்றில் சில சட்டவிரோதமானவை என்ற புகார்களும் உண்டு).

நாம், அம்மாதிரி பள்ளிகளுடன் போட்டிப்போட வேண்டியதில்லை. நம் அளவிற்கு சிறப்பாக படித்து, சரியான முறையில் தேர்வெழுதி, முடிந்தளவிற்கு அதிக மதிப்பெண் பெறுவோம். நமது மதிப்பெண் மாநில அளவிலான மதிப்பெண்ணாகவோ அல்லது மாவட்ட அளவிலான மதிப்பெண்ணாகவோ அல்லது பள்ளியளவில் முதல் மதிப்பெண்ணாகவோ அமையலாம்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை விட, பிளஸ் 2 மதிப்பெண், பல விஷயங்களுக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. முன்பெல்லாம், கலை-அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் பட்டப் படிப்பில், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், விலங்கியல், தாவரவியல், உளவியல் உள்ளிட்ட பல படிப்புகளில் சேர, அந்தளவிற்கு அதிகப் போட்டி இருக்காது. மேற்கண்ட பல படிப்புகளில், மாணவர்கள் போதிய அளவு சேராமல், காலியிடங்கள் எஞ்சியிருக்கும். எனவே, ஒருவர் கேட்டவுடன் சீட் கிடைக்கும்.

ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதோடுமட்டுமின்றி, பொறியியல், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு, முன்புபோல, மாணவர்கள் முட்டி மோதுவதில்லை. எனவே, கலை - அறிவியல் கல்லூரிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது.

கலை - அறிவியல் கல்லூரிகளில், இடங்கள் நிரம்பாமல், காலியாக இருந்த துறைகளுக்கு, இப்போது கடும் போட்டி. மதிப்பெண் குறைவாக இருக்கும் மாணவர்கள் கூட, அதிக நன்கொடை கொடுத்து சேர்வதற்கு தயாராக உள்ளனர்.

உயர்கல்வியின் நிலை இப்படி மாறிவிட்ட சூழலில், பொதுவாக, மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மாணவர்களை சேர்க்கும் ஒரு நடைமுறையில், நமது மதிப்பெண் குறைந்தால், நாம் எந்த நிலைக்கு ஆளாவோம் என்பதை சற்று யோசித்துப் பார்க்கவும்.

இந்திய கல்வித் திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற போராட்டம் ஒருபுறம் இருக்கட்டும். அது, இப்போதைக்கு நடக்காத காரியம். எனவே, விரும்பிய கல்லூரியில், விரும்பிய படிப்பை மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

இதன்மூலம், அரசு பொதுத்தேர்வுகள் என்பவை, உண்மையான போர்க்களமாக இல்லை என்றாலும், அதை எதிர்கொள்ள, போர்வீரன் போன்று தயாராக வேண்டியது அவசியமாகிறது.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"