Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/09/2018

அநியாத்துக்கு இப்படி செய்யலாமா? பாதிரியாரே...


பாதியாருக்கு அறிவுரை சொன்ன விவசாயி...!  

ஒருவர் தன் பொறுப்பை உணர்ந்து, தன் வேலையைச் செய்வதற்கே சங்கடப்படும் காலமிது; கடமையைச் செய்யாமல் தட்டிக்கழிப்பவர்கள் அநேகம் பேர். ஆனாலும், விடாப்பிடியாகத் தன் கடமையைச் செய்யும் கர்மவீரர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் தினமும் பார்க்கிற வேலையாகவே இருந்தாலும்கூட, அதையும் எந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்கிற அளவும் உண்டு. அது பலருக்கும் தெரிவதில்லை. நீங்கள் வேலையில் கில்லியாக இருக்கலாம். ஆனால், இடம், பொருள் அறியாமல் அநியாயத்துக்குக் கடமை உணர்வோடு இருப்பதும் தவறு. இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கதை.

இங்கிலாந்திலிருக்கும் பழைமையான சிறு தேவாலயம் அது. உள்ளூரிலிருந்தும் அக்கம் பக்கத்திலிருக்கும் சிறு கிராமங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வழிபாட்டுக்கு பெருந்திரளாக மக்கள் அங்கே கூடுவது வழக்கம். அது ஒரு பனிக்காலம். முன்பு எப்போதும் இல்லாததைவிடக் கடுமையான பனிப்பொழிவை இங்கிலாந்து எதிர்கொண்ட நேரம் அது. சனிக்கிழமை இரவில் பெய்த பனி, பனித்துகள்களால் அந்த தேவாலயத்தையே குளிப்பாட்டியிருந்தது. வீட்டைவிட்டு வெளியேறவே மக்கள் பயந்த அவ்வளவு குளிரில், ஒரே ஒருவர் மட்டும் தேவாலயத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு விவசாயி. இத்தனைக்கும் நெடுந்தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து வந்திருந்தார்.

இப்போது தேவாலயத்தில் இரண்டு பேர்தான் இருந்தார்கள். ஒருவர், விவசாயி. மற்றொருவர், பாதிரியார். கொஞ்ச நேரம் காத்திருந்தார் பாதிரியார். வேறு யாரும் சர்ச்சுக்கு வருவதாகத் தெரியவில்லை. அவர் நேரே அந்த விவசாயியிடம் போனார். ``ஐயா... நீங்க ஒருத்தர்தான் இன்னிக்கி வந்திருக்கீங்க... வாரா வாரம் நூத்துக்கணக்கானவங்களுக்காக செய்யற பிரார்த்தனையை உங்க ஒருத்தருக்காகச் செய்யலாமானு எனக்குத் தெரியலை. நாம என் ரூமுக்குப் போய் கொஞ்சம் குளிர் காய்ஞ்சிட்டு, சூடா ஏதாவது குடிக்கலாமா... என்ன சொல்றீங்க?’’ என்று கேட்டார் பாதிரியார்.

ஐயா உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பாமரன். விவசாயி. என் ஆடு, மாடுங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு புல், இலைதழைனு இரை போடவேண்டியிருக்கும். எல்லாமே பசியோட இருக்காது. ஏதோ ஒண்ணே ஒண்ணுதான் பசியோட திரும்பிப் பார்க்கும். அது ஒண்ணுதானே இரை வேணும்னு கேட்குதுனு அதுக்கு இரை போடாமத் திரும்பினா நல்லாவா இருக்கும்?’’

இதைக் கேட்டதும் பாதிரியார் அசந்துபோனார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம் என வெட்கப்பட்டார். `ஒரே ஒருவர் வந்திருக்கிறார் என்பதற்காக வாரா வாரம் நடக்கும் சிறப்புப் பிரார்த்தனையைச் செய்யாமல் நிறுத்துவதா? நல்லவேளையாக இந்த விவசாயி எனக்குப் பாடம் சொல்லிவிட்டார்’ என்று புரிந்துகொண்டார். பிரார்த்தனையை ஆரம்பித்தார். இறைவனைத் துதிக்கும் பாடல்களைப் பாடினார். பைபிளிலிருந்து வசனங்களைப் படித்தார். ஆத்மார்த்தமாக இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பிரார்த்தனை செய்து முடித்தார்.

பிறகு விவசாயியிடம் வந்தார். நான் இன்னிக்கி என் கடமையிலிருந்து தவறியிருப்பேன். நல்லவேளையாக என்னைக் காப்பாத்தினீங்க. உங்களாலதான் இன்னிக்கி பிரார்த்தனை நல்லவிதமா முடிஞ்சுது. நீங்க என்ன சொல்றீங்க?

ஐயா... உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பாமரன். விவசாயி. என் ஆடு, மாடுங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு இரை போடணும்தான். எல்லாமே பசியோட இருக்காது. ஏதோ ஒண்ணே ஒண்ணுதான் பசியோட திரும்பிப் பார்க்கும். அதுக்காக மொத்த மந்தைக்கும் வாங்கின புல், இலை தழையை அது ஒண்ணுக்கேவா திணிக்க முடியும்?


0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"