Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/17/2011

படித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ...!


ள்ளளவு தமிழ் -
கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே
தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ;
காட்சி ஊடக கடல்களில்
அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...!

மொழியின் நலிவு -
மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர்
இனத்தின் அழிவு -
மொழியின் நலிவினில் துவக்கம்...!


மொழியில் மட்டுமா கலப்பு - இன்று
அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ;
உணவில் கலப்பு -
நோயின் பிறப்பு ;
பண்பாட்டில் கலப்பு - சமூக
சீரழிவின் தொகுப்பு ; - இவையே
இன்றைய தீரா அருவருப்பு...!

பிறமொழிகளின் ஆளுமைக்கு காரணம் - அவை
வருமானம் தரும் மொழிகளாம் ;
வருமானம் தரும் - ஆனால்
அவை தன்மானம் தருமா...?
அதைப் பற்றி - இங்கு
யாருக்கு கவலை...!?

வருமானம் தரும்
மொழி... - அது
ஒரு புறம் இருக்கட்டும் ;
ஆயினும் - இந்த
நாறிய மேலை நாட்டு -
நாகரிகம் என்ன தரும்...?!



நடையில், உடையில்
பழகும் பண்பில், பாசத்தில் -
சிறந்த நட்பில் -
அழகிய காதலில் - இனிய
உறவில் - அட

அன்பில் கூட - நாம்
அன்னியப்பட்டுப் போனோம் - நம்
பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து !

கவின்மிகு - நம்
பண்பாட்டுச் சோலை ;
ஏன்...? - இந்த
மேலைக் கானல் நீர் -
பாய்ச்சும் வேலை...!

பாரதி போல்... தேவநேய பாவாணர் போல்...
பன்மொழிப் புலமை வேண்டும் -
பன்னாட்டுக் கலைகள் யாவும் -
பழகிடல் வேண்டும் - அவை
நம் மொழியின் , நம் பண்பாட்டின் புகழினை
எந்நாட்டிலும் பேசிடுவதற்கே...!

நம் - அண்டை
கன்னடத்தில் ஓர் அரும் நிகழ்வு...
கோடிக்கணக்கான மதிப்பில் -
வேளாண் துறை திட்டம் - அதன்
கருத்துரு ஆங்கிலத்தில் எழுதியவர்களுக்கு -
1000 ரூபாய் தண்டம் விதித்தது -
உத்தர கன்னட மாவட்ட நிர்வாகம் ;
கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டதால்...!

இங்கும் ஒரு நிகழ்வு அதே நேரத்தில்...
ஓசூருக்கு அருகில்,
ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் - தம்
தாய் மொழித் தமிழில் பேசியதற்கு -
தண்டம் விதித்தது கல்லூரி நிர்வாகம் ;
இது போல் - இங்கு
நாள்தோறும் நிகழ்வுகள் ஆயிரம்...!



மனவேதனையுடன்...
கடுந்தவம் தானிருந்து
கடவுளிடம் வரம் கேட்டேன் !
தனித் தமிழுக்கு ‘பாதுகாப்பு’
தா என்று...!

என்ன...

தனித் தமிழுக்கு 'பாதுகாப்பா...?’
இவ்வரம் தர எம்மால் இயலாது -
வேறு வரம் கேள் என்றே - புன்னகைத்து
சென்று விட்டான் - எம்
செந்தமிழ்க் கடவுள்...!

ஏதும் விளங்காமல் வீடுவந்தேன் ;
கேட்ட வரமே பிழை என்று -
பிறகே உணர்ந்தேன்...!

‘பாது’ என்பதே -
‘காப்பு’ எனும் பொருள் தரும் -
வடமொழிச் சொல்லே !

தமிழ் மொழியின் ஊடே இருந்து -
குழி பறிக்கும் - இம்
மொழிக் கலப்பினை - நலமில்லா
நாறிய மேலை நாகரிகக் கலப்பினை -
அடியோடு களையெடுக்க ; -மீண்டும்
தவம் இருக்கிறேன் -

பிழையில்லா வரம் கேட்க...!


நா. இதயா ஏனாதி ...
நந்தவனம்...

16 comments:

  1. படித்ததில் பிடித்தது படிக்கவும் பிடித்தது
    கூடுமானவரையில்
    தூயதமிழை பயன்படுத்தவேண்டும் என்ற
    உணர்வையும் கொடுத்தது
    தரமான பதிவு.கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. அருமையான கவிதை.. படித்ததை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  3. தனிச்சுவை கொண்ட தமிழே
    உன்னில் பிறர் கலப்பதை
    யாம் ஏற்கோம்!!
    திசைச் சொற்களின் கலப்பை
    அருமையாக எடுத்துரைக்கும்
    அழகுத் தமிழ் கவிதை

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  4. நடைமுறை இடைச்செருகல்களை உணர்த்தும் கவிதை மாப்ள!

    ReplyDelete
  5. மேலை நாட்டவர் நம்மிடம் விட்டுச் சென்றது ஆங்கில மோகத்தை? ஒன்னும் செய்ய முடியாது.

    ReplyDelete
  6. யாமும் உம்முடன் தவமிருக்க துணையிருப்போம் .

    ReplyDelete
  7. ஏ யப்பா என்னய்யா ஆச்சு....!!

    ReplyDelete
  8. ஒருமுறை ஜெயகாந்தன் சொன்னார் ”மாடர்ன் என்பது வெஸ்டர்ன் அல்ல”என்று!இம்மொழிக்கலப்பும் மாடர்ன் ஆகக் காட்டிக் கொள்ள நினைக்கும் ஒரு வேண்டாத உத்தியே!

    ReplyDelete
  9. இனத்தின் அழிவு -
    மொழியின் நலிவினில் துவக்கம்...!//

    தட்டி எழுப்பி உணர்த்தும் மொழிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. கலக்குறீங்க பாஸ்.

    ReplyDelete
  11. படித்ததில் பிடித்தது, எம் தமிழ் மொழியின் அருமையினையும், தமிழில் பிற மொழிகளின் கலப்பால் மொழி, பண்பாடு, கலாச்சாரம் முதலிய விடயங்களில் ஏற்படும் சிறுமையினையும் அழகா வெளிப்படுத்தி நிற்கிறது.

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு நன்றி சகோதரரே .
    என் முதற்ப்பாடல் வலைத்தளத்தில்
    உங்கள் கருத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது வாருங்கள் உங்கள்
    பொன்னான கருத்தினைக் கூறுங்கள்
    சகோதரரே....

    ReplyDelete
  13. ஆங்கிலம் கற்க சென்றேன், நோக்கம் கேட்டார்கள். தமிழில் சொல்ல அனுமதி கேட்டேன்........

    அலுவல் மொழி
    ஆனா காரணத்தினால்
    ஆகார மொழியானதன்றோ
    ஆதலால்
    ஆலகாலம் என்றாலும்
    ஆகட்டும் பார்க்கலாம்

    என வந்தேன் என்றேன்
    ஆம் தமிழ்
    கைத்தட்டல் பெற்று தந்தது

    வாழ்த்துக்கள் தோழனே

    ReplyDelete
  14. மொழியின் நலிவு -
    மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர்
    இனத்தின் அழிவு -
    மொழியின் நலிவினில் துவக்கம்...!
    மிக நல்ல கருத்து வரி....வாழ்த்துகள்...
    Vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"