Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/07/2018

ஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மும்பைக்கா? ஓர் அலசல்!

ஐ.பி.எல்., தொடரின் 11வது 'சீசன்' இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, மும்பையை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல்., தொடரின் 11வது 'சீசன்' இன்று துவங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியை பொறுத்தவரை, சூதாட்ட சர்ச்சையிலிருந்து மீண்டு 2 ஆண்டு தடைக்கு பின் தடம் பதிக்கிறது. வழக்கமான துவக்க ஜோடியான, டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் இல்லாததால், தமிழகத்தின் முரளி விஜய் துவக்கம் தருவார் என எதிர்பார்க்கலாம். இவருக்கு டுபிளசி 'பார்ட்னர்ஷிப்' தருவார் எனத்தெரிகிறது. வாட்சனும் நம்பிக்கை தரலாம்.

எந்த இடத்தில் தோனி

'மிடில்-ஆர்டரில்' ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ் இருக்கின்றனர். 'தல' தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 6வது இடத்தில் களம் காணும் இவரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு, முன்வரிசையில் விளையாடலாம். கடைசி கட்டத்தில் ரன் சேர்க்க 'ஆல்-ரவுண்டர்' ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளனர்.

அனுபவ ஹர்பஜன்

இன்றைய பல முன்னணி பவுலர்கள் தோனியால் பட்டைத்தீட்டப்பட்டவர்கள்தான். இதனால், கிடைத்த வாய்ப்பை வேகப்பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாகூர், லுங்கிடி பயன்படுத்தினால் நல்லது. வாட்சனின் அனுபவமே அணிக்கு நம்பிக்கை தருகிறது. 'சுழலில்' தமிழகத்தின் அஷ்வின் இல்லாத குறையை ஹர்பஜன், ஜடேஜா, இம்ரான் தாகிர் நீக்க வேண்டும். கடந்த 10 ஆண்டாக, மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன், அதே அணியை எதிர்த்து களம் காண்பது வித்தியாசமானது.

சிதறடிக்கும் ரோகித்

மும்பை அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வருகிறது. துவக்கத்தில் எதிரணி பந்துவீச்சை சிதறடிப்பதில் கைதேர்ந்தவர் ரோகித். இவருக்கு பக்கபலமாக, லீவிஸ், போலார்டு, சூர்யகுமார் யாதவ் திகழ்கின்றனர். சகோதர்களான ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யாவின் 'ஆல்-ரவுண்டர்' பங்களிப்பு நிச்சயம் தேவை.

அச்சுறுத்தும் பவுலிங்

'யார்க்கர்' மலிங்கா இம்முறை பவுலிங் ஆலோசகராக மாறிவிட்டாலும், பும்ரா மிரட்டுகிறார். கடைசி கட்ட ஓவரில் கஞ்சனாக மாறும் இவரின் செயல்பாடு அசர வைக்கிறது. கம்மின்ஸ், பென் கட்டிங், முஸ்தபிஜுர் ரஹ்மான் உள்ளிட்ட 'வேகங்கள்' இருப்பதால் 'லெவன்' அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படலாம். சுழல் பணிக்கு தனஞ்செயா, குர்னால் பாண்ட்யா, அன்குல் ராய் என அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பது பின்னடைவு.

இரண்டு ஆண்டுக்குப்பின் பங்கேற்கும் முதல் போட்டியில் வெற்றியை நோக்கி சென்னையும், தொடரை வெற்றியுடன் துவக்க மும்பையும் மோதுவதால் சற்று 'சூடான டுவென்டி-20' போட்டியை காணலாம்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"