Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/12/2018

GoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க.

#Gobackmodi ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஒட்டுமொத்தப் பி.ஜே.பி-யினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது!

மோடியின் தமிழக வருகைக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திவருவதைக் கண்டு அதிர்ந்து நிற்கிறது பி.ஜே.பி! காவிரி விவகாரம் தொடர்ச்சியாக அரசியலாக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே எதிர்ப்பு மனநிலையை உருவாக்கிவருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் `காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க மத்திய பி.ஜே.பி அரசுக்கு 6 வார காலம் அவகாசம் கொடுத்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பையடுத்து, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் `நல்லதொரு தீர்வு கிடைத்துவிட்டது... இனி நிச்சயம் தமிழகத்துக்குள் காவிரி நீர் பாய்ந்தோடிவரும்' என்ற முழு நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்த 6 வார காலக் கெடுவின் இறுதி நாளன்று, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்த மத்திய பி.ஜே.பி அரசின் செயல்பாடு தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் வெளிப்பாடாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைத் தமிழகத்தில் நடத்தக் கூடாது எனக்கூறி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில், சென்னை, மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க இன்று தமிழகம் வருகை தந்தார் பிரதமர் மோடி. சொட்டுத் தண்ணீரின்றி வாடிக்கிடக்கும் தமிழக மக்களுக்கு மோடியின் இந்த வருகை வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மோடியின் வருகையை எதிர்த்து தமிழகம் முழுக்க வீடுகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் மோடியின் வருகைக்கு எதிராக அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கறுப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியே திரும்பிப் போ' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திவந்த அவர்கள், மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள்.

மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுக்கக் கிளம்பியிருக்கும் இந்த எதிர்ப்பு மனநிலை, அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ``உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தப் பெருமைமிகு நாட்டின் பிரதமராக இருப்பவர் மோடி. ஜனநாயகத்தின் அடிப்படையே அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான். ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில், தனது சொந்தக் கட்சி நலன் சார்ந்து செயல்படும் பிரதமர், தமிழக மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவருகிறார். இதற்குப் பதிலடியாக தமிழக மக்களும் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பைப் பலமாகப் பதிவுசெய்துள்ளனர். 

அதன் வெளிப்பாடுதான் இணையதளங்களில், மோடி எதிர்ப்பு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. ஆக, இந்த எதிர்ப்பானது, உலக அரங்கில் மோடியின் பெயரைக் களங்கப்படுத்துவதாகவே அமையும்!''

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"