Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/05/2018

இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு வருமா ?

தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இரண்டு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த, 2009, ஜூன், 1க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 8,370 + 2,800 = 11,170 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், 2009, ஜூன், 6க்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 5,200 + 2,800 = 8,000 ரூபாய் என்ற அடிப்படை ஊதியமும், அரசு வழங்குகிறது.



ஒரே மாநிலத்தில், ஒரே கல்வி தகுதியில், ஒரே பகுதியில், ஒரே பணி நிலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடையே, அடிப்படை ஊதியத்தில், 3,170 ரூபாய் குறைத்து வேறுபடுத்தப்பட்டுள்ளது. ஜூன், 2009, 1ம் தேதியை மையமாக வைத்து, முன், பின் என, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை வேறுபடுத்தியுள்ள அரசு, அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை.

வரலாற்றில், கி.மு., - கி.பி., என, காலத்தை பிரிப்பது போன்று, ஊதியத்தை பிரித்து, வேறுபடுத்தி கேலிக் கூத்தாக்கி, இடைநிலை ஆசிரியர்களிடையே பிரிவினையை, அரசு ஏற்படுத்துகிறது.இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதிய முரண்பாடு என, ஒரே வரியில் கூறி, ஆசிரியர் சங்கங்கள், 10 ஆண்டுகளாக போராடுகின்றன. எத்தகைய முரண்பாடு, எதில் முரண்பாடு, எப்படி முரண்பாடு என, அரசுக்கு தெளிவாக, சரியாக, விளக்கமாக கூறவில்லை. பெயருக்கு வீதியில் இறங்கி, ஆசிரியர்கள் சங்கங்கள் போராடுவது, விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.

முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட குழுக்களும் உண்மை நிலையை, பாதிப்பை ஆராய்ந்து, சரி செய்யாமல் கைவிட்டன. நீதிமன்றம் மூலம், நியாயம் பெற முயற்சி செய்தாலும், வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்படுகின்றன. இதற்கு, பால் வார்த்தாற்போல், 'சம வேலைக்கு சம ஊதியம் என்ற அரசியல் சட்டப் பிரிவு, 141ன் படி, அரசு ஊழியர்களை வேறுபடுத்தி, ஊதியம் வழங்குவது சட்டவிரோதம்' என, 2016, அக்., 30ல் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தீர்ப்பிற்கு எதிராக, நாட்டிலேயே, தமிழகத்தில் மட்டுமே, கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வேறுபடுத்தி கொடுப்பது வேதனை அளிக்கிறது. தற்போது அமல்படுத்தப்பட்ட, ஏழாவது ஊதியக் குழுவிலும், ஆசிரியர்களின் ஊதியம் உயரவில்லை. நேர்மாறாக, ஊதிய இழப்பு அதிகமாகி, மாதந்தோறும், 15 ஆயிரம் ரூபாயை இழக்கிறோம். இடைநிலை ஆசிரியர்கள் கேட்பதெல்லாம், சக ஆசிரியர் பெறும் மாநில அரசு ஊதியம் கொடுத்தாலே போதும். அரசும், ஒரு நபர் குழுவும், இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணும் என, நம்புகிறோம்!---

ஆர்.சோலையப்பன், இடைநிலை ஆசிரியர்,

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"