Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/08/2018

அடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி

தோல்விகளைச் சந்திக்காத இயக்குனர் என்ற பெயரை தக்கவைத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘பாகுபலி’ படத்தின் மூலமாக பிரமாண்ட இயக்குனர்களின் பட்டியலில் உலக அளவில் இடம்பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தோடு சேர்த்து இதுவரை 11 படங்களை இயக்கியிருக்கும் எஸ்.எஸ். ராஜமவுலியின் அனைத்தும் படங்களுமே வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது படங்கள் அனைத்திலும் படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேஸ்வரராவ், இசையமைப்பு எம்.எம்.கீரவாணி. இது தவிர ராஜமவுலி இயக்கிய 11 படங்களில் 9 படங்களுக்கு அவரது தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

எஸ்.எஸ்.ராஜமவுலி ஆரம்ப காலகட்டத்தில்,  இயக்குனர் கே.ராகவேந்திரராவ் வழிகாட்டுதலின் பேரில் தொலைக்காட்சி தொடர்களை இயக்கிக்கொண்டிருந்தார். பின்னர் கே.ராகவேந்திரராவ் தயாரிப்பில் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ என்ற படத்தை இயக்கினார். ஜூனியர் என்.டி.ஆர். அறிமுகமான ‘நின்னு சூடாலனி’ திரைப்படம் தோல்வியடைந்த நிலையில், அவரை வைத்து ராஜ மவுலி இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்கவும் அந்த வெற்றி உதவியது.

2001-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ‘ஸ்டூடண்ட் நம்பர்-1’ என்ற பெயரிலேயே தமிழிலும் வெளியான இந்தப் படத்தில் சிபிராஜ் நடித்திருந்தார்.

இதையடுத்து 2003-ம் ஆண்டு மீண்டும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ‘சிம்ஹாத்ரி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்தப் படம் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் ‘கஜேந்திரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அடுத்ததாக நிதின், ஜெனிலியா நடிப்பில் 2004-ம் ஆண்டு ‘சை’ என்ற படம் வெளியானது. இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் ‘பாகுபலி’ ஹீரோவான பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் 2005-ம் ஆண்டு ‘சத்ரபதி’ என்ற படத்தை இயக்கினார். வெற்றிப்படமான இந்தப் படம், ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் பிரபலமானதைத் தொடர்ந்து, தமிழில் ‘சந்திரமவுலி’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.

ரவிதேஜா, அனுஷ்கா நடிப்பில் ராஜமவுலி இயக்கி, 2006-ம் ஆண்டு வெளியான ‘விக்ரமார்க்குடு’ படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, அந்தப் படமும் தமிழில் கார்த்தி, தமன்னா நடிப்பில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் ரீமேக்கானது. இந்தப் படத்தை அடுத்து ராஜ மவுலியுடன் மூன்றாவது முறையாக ஜூனியர் என்.டி.ஆர். இணைந்தார். இந்தக் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியான ‘எமதொங்கா’ திரைப்படம், ராஜமவுலி பிரமாண்ட இயக்குனர் என்பதற்கான அஸ்திரவாரத்தை அமைத்துக் கொடுத்தப் படம் என்றால் அது மிகையல்ல. இந்தப் படத்தில் எமலோகத்தில் நடை பெறுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிரஞ்சீவி மகன் ராம் சரணுடன் இணைந்தார் ராஜமவுலி. தனது முதல் படத்தில் வெற்றிபட இயக்குனரான பூரிஜெகந்நாத்துடன் இணைந்து ‘சிறுத்தா’ படத்தைக் கொடுத்த ராம்சரணுக்கு, அந்தப் படம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எனவே தொடர் வெற்றியைக் கொடுத்து வரும் ராஜமவுலியிடம், தன் மகனை சேர்த்து விட்டார் சிரஞ்சீவி. தெலுங்கில் ‘மகதீரா’ என்ற பெயரிலும், தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரிலும் வெளியான இந்தப் படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாத்துறையினர் அனைவரையும் ராஜமவுலியை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது.

இதனால் அவரது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அனைவரும் அடுத்து என்ன பிரமாண்டப் படத்தை இயக்கப்போகிறார்? என்று கூர்ந்து கவனித்த வேளையில், சாதாரணமாக ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கினார். அதுவரை தெலுங்கில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சுனிலை கதாநாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி. அதற்கு இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டதே சான்று ஆகும். சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம், மரியாதை ராமண்ணாவின் ரீமேக்தான்.

அடுத்ததாக ராஜமவுலி, ஈயை வைத்து கிராபிக்ஸ் மூலம் பிரமாண்டமாக இயக்கியிருந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. சுதீப், நானி, சமந்தா நடிப்பில் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் வெளியான அந்தத் திரைப்படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக வெளியான ‘பாகுபலி’ படத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதன் வெற்றி உலகம் அறிந்த ஒன்றாகிப்போய்விட்டது. உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடிவரை அந்தப் படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் ராஜமவுலி. ‘பாகுபலி’ திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி ஆகிய இரண்டு நாயகர்கள் நடித்ததைப் போலவே, அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோரை இயக்குகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தின் கதைக்களம் குத்துச்சண்டையை அடிப்படையாகக் கொண்டது என்று அரசல்புரசலாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

எது எப்படியோ.. இதுவரை தான் இயக்கிய 11 படங்களையும் வெற்றிப்படமாக்கிக் காட்டிய ராஜமவுலி, தன்னுடைய அடுத்த வெற்றிக்கு தயாராகிவிட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"