"தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் தங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க.,வே காரணம்' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
"கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால் தென் மாநிலங்களில் ஓட்டு வங்கியை இழந்து விட முடியாது என்பதால், இந்த மாநிலங்கள் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்' என்றும் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "சந்தேஷில்' நேற்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளன.
கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால், தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் ஓட்டு வங்கியை இழப்பது சரியல்ல. அதனால், இந்த மாநிலங்களில் கூட்டணி தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர், அரசு கருவூலத்திற்கு ஏற்படுத்திய மிகப்பெரிய இழப்பால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியால், தி.மு.க., தலைமையிலான அரசு செய்த நல்ல பணிகளையும் மறந்து, மாற்று கட்சிகளுக்கு ஓட்டளித்துள்ளனர். ஊழல் விவகாரத்தில், தி.மு.க.,வுடன் தொடர்புடைய பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு எதிராக, சட்டம் தன் கடமையைச் செய்ய மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இழந்த புகழை காங்கிரஸ் மீண்டும் பெற வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அத்துடன் கீழ்மட்ட அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டியதும் அவசியம்.முக்கிய நபர்கள் தொடர்புடைய பல ஊழல் வழக்குகளை விசாரணை நிறுவனங்கள் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த விவகாரங்கள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளன. விசாரணை நிறுவனங்கள், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சமின்றி செயல்படும். எந்தவிதமான இடையூறும் இருக்காது என்பதற்கு, இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஒரு உதாரணமாகும்.இவ்வாறு தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.