Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/22/2018

ஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்

அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார்.
‘‘இந்தியாவில் வெகு விரைவில் “ஆய்வுக்கூட இறைச்சி” (“Lab-Grown Meat”) அல்லது “சுத்தமான இறைச்சி” (“Clean Meat”) கிடைக்கவுள்ளது. இந்தியாவில் இன்றுள்ள இறைச்சித் தொழில் நடைமுறைகளும், நுகர்வுப் போக்குகளும் சுற்றுச்சூழலைக் கெடுத்து வருகின்றன. மிகுந்த செலவினம் கொண்டவையாகவும் இருக்கின்றன. இந்தப் புதிய ஆய்வுக்கூட இறைச்சி அவற்றிற்கு தீர்வாக அமையும். அது நோயற்றதாகவும் இருக்கும்.”- இதுதான் அவரது பேச்சின் சாராம்சம்.

சுற்றுச் சூழல் குறித்து…

பசுங்கூட வாயுக்களில் (Green House Gases) 15 சதவீதம் கால்நடைகள் மூலமே வெளியேறுகின்றன. ஒரு கிலோ ஆட்டிறைச்சி உற்பத்தி செய்ய 8000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறதாம். (அவ்வளவு தண்ணீரா? ஆச்சரியமாக இல்லை?) இது தவிர இறைச்சி உற்பத்தி தொழில் சுற்றுச்சூழலையும் கெடுத்து விடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு பசு 600 லிட்டர் மீத்தேன் வாயுவினை உற்பத்தி செய்கிறது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் பசுக்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகள், மனிதர்களின், குறிப்பாக ஏழை மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றன. மேலை நாடுகளில் வந்துவிட்ட இந்த வகை இறைச்சியின் விலை சற்று அதிகமாக உள்ளது. நம் நாட்டில், அது ஒன்று தான் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை.

-இப்படி சுத்தமான இறைச்சிக்கு ஆதரவாக, நிறைய விவரங்களை இந்திய ஊடகங்களும் வெளியிடத் தொடங்கி விட்டன.

விலங்கிலிருந்தே தொடங்கும்….

இந்த இறைச்சி உற்பத்தி தொடங்கும் போது, குறிப்பிட்ட விலங்கின் (ஆடு, மாடு என எதுவாகவும் இருக்கலாம்) மரபுமூல உயிரணு தேவைப்படும். அதன் மூலம் அந்தந்த இறைச்சியினை ஆய்வுக் கூடத்திலேயே வளர்த்து விட முடியும். அதாவது, அத்தகைய ஆய்வுக் கூடங்கள் இறைச்சி உற்பத்தித் தொழிற்சாலைகளாக மாறிவிடும் போலத் தெரிகிறது. இந்த வகை உற்பத்தி நடைமுறைக்கு வந்து விட்டால், இனிமேல் நாம் அதிக அளவில் பசுக்களை வளர்க்கவும் தேவை இல்லை. இறைச்சிக்காகக் அவற்றைக் கொல்லவும் தேவை இல்லை என்பதும் வாதமாக வைக்கப்படுகிறது.

அமெரிக்கச் சந்தையில்….

எதனை எப்படி உற்பத்தி செய்தாலும், இறுதியில் அதன் சுவை தான் மக்களின் ஏற்பினையோ, எதிர்ப்பினையோ முடிவு செய்யும். அமெரிக்க நாட்டில் ஆடு,மாடு,கோழி, வாத்து என பல ஆய்வுக்கூட இறைச்சி வகைகள் சந்தைக்கு வரத் தொடங்கி விட்டன. மக்கள் அதை கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கத் தொடங்கி விட்டனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் சுத்தமான இறைச்சி அமெரிக்கச் சந்தையில் பெருமளவில் வந்து விடும் எனக் கூறப்படுகிறது. பில் கேட்ஸ், ரிச்சர்ட் பிரான்சன் போன்ற அமெரிக்க பில்லியனர்கள் இந்தப் புதிய கம்பெனிகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர் என்றால், போக்கினைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

பாரம்பரிய இறைச்சி உற்பத்தியாளர்களுக்கும், புதிய உற்பத்தியாளர்களுக்கும் வணிகப் போர் தொடங்கி விட்டது. பாரம்பரிய இறைச்சி மட்டுமே, சட்டப்பூர்வமாக இறைச்சி என அழைக்கப்பட வேண்டும் என்பது பாரம்பரிய உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக மாறியிருக்கிறது. சுத்தமான இறைச்சி என்ற பதம் தடை செய்யப்பட வேண்டும் என்பதும் அவர்கள் கோரிக்கை. ஒன்றை சுத்தமானது என்று சொன்னால், மற்றது அசுத்தம் எனப் பொருள்பட்டு விடும் என்பதே அவர்களின் வாதம்.

இந்தியாவின் நிலை என்னவாகும்?

அமெரிக்காவில் அது வந்து விட்டால், இந்தியாவிற்கு வர அதிக நாள் பிடிக்காது. இப்போது இறைச்சியில் தொடங்குவது, பாலில் தானே போய் முடியும்?

அந்நாட்டில் பாரம்பரிய இறைச்சித் தொழில் பெரு முதலாளிகளின் கைகளில் இருக்கிறது. புதிய இறைச்சி வகை, அவர்களையே பாதிக்கும் எனில், நம் நாட்டில் இதில் ஈடுபட்டு வரும் சிறு விவசாயிகள், வியாபாரிகள் நிலை என்னவாகும் என்பதே இப்போது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.


சில்லறை வணிகம் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் நுழையும் அந்நிய மூலதனம் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறது?

=இ.எம். ஜோசப்===

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"