பல நிகழ்ச்சிகளில், 'உங்களுக்கு, மிகவும் பிடித்த தொழில் எது?' என, நிருபர்கள் கேட்ட போதெல்லாம், சட்டென, 'ஆசிரியர் பணி' என்றார், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம்.
தன் பதவி காலத்தில், நாட்டிலுள்ள, பல பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி, எதிர்கால இந்தியாவை உருவாக்க பாடுபட்டார். அது மட்டுமின்றி, ஜனாதிபதி பணி ஓய்வுக்கு பின், சென்னை அண்ணா பல்கலையில், சிறப்பு பேராசிரியராக, அப்துல் கலாம் பணியாற்றினார்.
அப்துல் கலாம் நேசித்த, ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. முன், 100 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது; தற்போது, 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இது, நாடு முழுவதும் நல்லாசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தாண்டு, கோவையைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் மட்டும், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்திலிருந்து, நல்லாசிரியர் விருதுக்காக, பல ஆசிரியர்களை, மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஒருவரை மட்டும், மத்திய அரசு தேர்வு செய்துள்ளது, மிகவும் வருந்தத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியின், ஆங்கில ஆசிரியர், கோவிந்த் பகவான், பணி மாற்றம் செய்யப்பட்டார். அவர் பணி மாறுதலை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின், மாவட்ட கல்வி நிர்வாகம் பணிந்து, அவரை, அதே பள்ளியில் பணி புரிய அனுமதி அளித்துள்ளது.
இவரை போல், எண்ணற்ற ஆசிரியர்கள், தங்கள் தொழிலை புனிதமாக கருதி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு விருதுகள் மறுக்கப்படுகின்றன. தகுதி இல்லாத சினிமா நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசால், தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த விருதுகளில் அரசியல் புகுந்தது போல், நல்லாசிரியர் விருதிலும், புகுந்து விட்டது. அதனால் தான், விருது பெறுவோர் எண்ணிக்கையை குறைத்தது மட்டுமின்றி, பல மாநிலங்கள் ஓரங்கட்டப்படுகின்றன; இந்நிலை, மாற வேண்டும்.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"