தூப்புக்காரி என்ற நாவல் எழுதியதன் மூலம் இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான இளம் சாகித்திய அகதமி விருதைப்பெற்றவர்.
இந்த பக்கம் துப்புரவு தொழிலாளியாக கருதப்படுபவர்கள்தான் நாகர்கோவில் வட்டார வழக்கில் 'தூப்புக்காரி' என அழைக்கப்படுகின்றனர்.
ஆஸ்பத்திரியில் தூப்புக்காரியாக வேலை பார்க்கும் பெண் ஒருவர், கழிப்பறை கழிவுகள், தீட்டுத்துணிகள், சாக்கடை கழிவுகளுடன், பெற்ற மகளின் அழுகையைக்கூட ஆற்ற முடியாத துயரத்துடன் வாழ்ந்த கதையே இந்த தூப்புக்காரியின் கதையாகும்.
இந்த கதை கடந்த 2012ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நாவலுக்கான விருதாக அறிவிக்கப்பட்டபோது, கதாசிரியை மலர்வதிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் நேரில் போய் வாங்க முடியுமா? என்ற வருத்தமும் இருந்தது. வருத்ததிற்கு காரணம், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு நேரில் போய்வர போக்குவரத்து செலவிற்கு பணம் இல்லாத பொருளாதார நிலமையே.
இவரது நிலை குறித்து தினமலர் இணையதளத்தில் செய்தி வந்ததும், உள்ளூர் முதல் கடல் கடந்துள்ள தமிழர்கள் வரை நான், நான் என்று போட்டியிட்டு உதவிக்கரம் நீட்டினர். தேடிப்போய் நேரில் கொடுத்தும் வாழ்த்தினர்.
அதன் பிறகு விஷயங்கள் மள,மளவென்று நடந்தேறியது.
கடந்த 22ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விருது பெற்று திரும்பியதும், தான் பெற்ற விருதுகளை முதலில் தினமலரோடு பகிர்ந்துகொள்கிறேன் என்று சொல்லி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
தூப்புக்காரி என்ற நாவல் என் தாயின் கதையே, கழிப்பறை கழிவுகளுடனும், கவலைகளுடனுமே சர்வகாலமும் காணப்பட்ட, என் தாயின் வேதனையை இனியும் யாரும் அனுபவிக்கக்கூடாது, மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற வேதனையில், ஆவேசத்தில் பிறந்ததுதான் அந்த கதை.
கதைக்கு கிடைத்த விருதை விட, கதாசிரியையான நான் இந்த விருதைப்பெற வேண்டும் என்ற தினமலர் வாசகர்களின் அன்புதான் என்னை இன்னும், இப்போதும் திக்குமுக்காட வைத்துள்ளது. தந்தை இல்லாத எனக்கு இப்போது எத்தனை அப்பாக்கள், அம்மாக்கள் மற்றும் பல உறவுகள்.
விருது அறிவித்தது முதல் அதனை பெற்று திரும்பியது வரை என் மீது அன்பு கொண்டு உதவியர்கள் நிறைய பேர், ஒருவர் பெயரைச் சொல்லி ஒருவர் பெயரை விட்டால் அது மரியாதையாக இருக்காது ஆகவே அனைவருக்குமே நன்றி. எனது தந்தையைப் போல என்னை வளர்த்துவரும் அண்ணன் ஸ்டீபன், எனக்காக வழிகாட்ட என்கூடவே விடுமுறை எடுத்து வருகை தந்த குமரிதோழன்,அசாம் மாநில தமிழ் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு சிறப்பு நன்றிகள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் எழுபது தமிழர் குடும்பங்கள் உள்ளன, அவர்கள் அனைவருக்குமே தமிழக செய்திகளை எடுத்துச் சொல்வது தினமலர் இணையதளமே. அவர்களில் நாற்பது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்தி படித்துவிட்டு விழா நாளன்று என்னை பார்க்கவும், பாராட்டவும் விழா மண்டபத்திற்கு கூடிவிட்டார்கள், மேலும் என்னை மேடையேற்றி தாமிர பட்டயம், பணமுடிப்பு போன்றவைகளை வழங்கியபோது எழுந்த அதிக கைதட்டலுக்கு சொந்தக்காரர்களும் அவர்களே, அது மட்டுமின்றி விழா மண்டபத்திலேயே எனக்கு அசாம் மாநில கலாச்சார தொப்பி மற்றும் துண்டு போன்ற உடையணிவித்து கவுரவப்படுத்தினார்கள், இது அங்கு வந்திருந்த வேறு எந்த மாநில எழுத்தாளருக்கும் கிடைக்காத சிறப்பான பரிசாகும்.
நான் தமிழில் கொடுத்த ஏற்புரைக்கும் அரங்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பை தமிழுக்கு கிடைத்த வரவேற்பாகவே எண்ணிப் பெருமிதம் கொண்டேன். பின்னரும் அன்பு குறையாமல், மறுநாள் தங்களது வீடுகளுக்கு அழைத்துப்போய் விருந்தும் வெகுமதியும் வழங்கியதுடன், விமான நிலையம் வரைவந்து வழியனுப்பிவைத்த அவர்களின் அன்பிற்கு ஈடே இல்லைதான்.
உழப்பட்ட நிலத்தில்தான் விளைச்சல் வரும், உரசப்பட்ட கல்லில்தான் சிற்பம் வெளிப்படும், ஆகவே துன்பம் எனும் பயிற்சி களம்தான் ஒருவரை மேம்படுத்தும் ஆகவே எனது வாழ்க்கையில் வலி ஏற்படுத்தியவர்களே எனது வழிகாட்டியவர்கள், எனக்கு ஏற்பட்ட காயங்கள் எல்லாம் அனுபவங்களே, அந்த அனுபவங்கள் பெற்று தந்ததே இந்த விருது. ஆகவே அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.
ஆங்கில கலப்பு இன்றி தமிழிலேயே பேசக்கூடிய, தனது நியாயமான செலவிற்கு தேவைப்பட்ட பணம் வந்தபிறகு, இணையதள வாசகர்கள் அனைவரிடமும் வாழ்த்து மட்டும் போதும் இனி பணம் அனுப்பவேண்டாம் என்று சொன்ன, என் சொந்த விஷயம் அலுவலக நேரத்தில் வேண்டாமே என்று சொல்லி அலுவலக நேரத்தில் போன் பேசாத, இப்படி பல பண்பாடுகளை சுமந்து கொண்டிருக்கம் மலர்வதி முத்தாய்ப்பாக கூறும்போது, விருதுக்காக நான் எழுதவில்லை ஆனால் இப்போது இந்த விருது என்னை இன்னும் நிறைய எழுத தூண்டியுள்ளது. மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி என்று கூறி முடித்தார். மலர்வதியின் தொடர்பு எண்: 9791700646.
நன்றி இணையம்.
மலர்வதியை மனம் நிறைய வாழ்த்துவோம்!
ReplyDeleteமலர்வதி அவர்கள் போற்றப்பட வேண்டியவர்... வாழ்த்துக்கள் பல...
ReplyDeleteஅவரைப் பற்றிய தகவலுக்கு நன்றி...
அவரது இலக்கியப் இமயம் தொட
ReplyDeleteமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
தோழி மலர்வதிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதோழி மலர்வதிக்கு என் வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் !
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .