நீங்கள் எப்போது இறக்கத் தொடங்குகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு மிக நேர்மையான பதில்... 'பிறந்த அடுத்த நொடியில் இருந்து' என்பதுதானே! 'நான் உற்சாகமானவன், சாதிக்கப் பிறந்த வன்' என்றெல்லாம் நீங்கள் எகிடுதகிடு தன்னம்பிக்கை வார்த்தைகள் வாசித்தாலும், நிதர்சன உண்மை அதுதான்.
ஆக, இறப்புதான் (இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதற்கு மன்னிக்கவும்!) நமது இலக்கு என்றால், அந்தப் பயணத்தைப் பக்காவாகத் திட்டமிட வேண்டும் அல்லவா? அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கு முன் நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களை உங்களுக்குச் சொல்கிறார் ஜான் இஸ்ஸோ தனது 'The Five Secrets You Must Discover before you die' புத்தகத்தில்.
'இவர் தனது வாழ்நாள் முழுக்கச் சந்தோஷமாகக் கழித்தார்!' என்று பலரால் சுட்டிக்காட்டப்பட்ட 200 நபர்களைப் பேட்டி எடுத்திருக்கிறார் ஜான். 60 முதல் 106 வயது வரையிலான அந்த 200 பேரின் 18,000 வருட அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்டு, இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் ஜான். 'வாழ்க்கையில் உங்களுக்கு அதீத சந்தோஷத்தைத் தந்தது எது? வாழ்க்கை யில் நீங்கள் மிக முக்கியமாகக் கருதுவது எதை?' இவை போன்றவைதான் அவர்களிடம் ஜான் கேட்ட கேள்விகள். அந்தப் பதில்களைச் செதுக்கி, சீராக்கி, வடிகட்டி வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய ஐந்து ரகசியங்களைப் பட்டிய லிடுகிறார் ஜான். உங்களுக்கும் நிச்சயம் உதவும் ரகசியங்கள்...
1) உங்களுக்கு உண்மையாக இருங்கள்!
தனது 75 வயது ஆயுளில் ஜார்ஜ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை பிசிக்ஸ் புரொஃபசராகக் கழித்திருக்கிறார். அவரிடம் மாணவர்களின் மனப்போக்கு குறித்துக் கேட்டேன். 'தனது இதயம் செலுத்திய பாதையில் பயணித்தவர்களுக் கும் அந்தப் பாதையைப் புறக்கணித்தவர் களுக்கும் இடையே மலையளவு வித்தியாசத்தை நான் கவனித்திருக்கிறேன். தனது தோளில் ஏற்றப்பட்ட பிறரது கனவுகள், ஆசைகள், லட்சியங்களை வேறு வழியில்லாமல் தூக்கிச் சுமந்த மாணவர்கள், வாழ்நாட்களைக் கழித் தார்கள். ஆனால், தனது மனம் விரும்பிய படிப்பைப் படித்த மாணவர்கள்தான் வாழ்ந்தார்கள். ஆயுளைக் கழிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஏகப்பட்ட வித்தியா சங்கள் இருக்கின்றன. தனக்கே உண்மையாக இல்லாதவர்கள் பிறருக்கு எப்படி உண்மையாக இருப்பார்கள்?' என்றார் அந்த புரொஃபசர்.
2) எந்த ஏக்கத்தையும் மிச்சம்வைக்காதீர்கள்!
84 வயது டோனல்ட் ஆறு வருடங்களுக்கு முன்தான் தனது பிரியமான மனைவியை இழந்திருந்தார். மனைவி யுடனான 56 வயது மணவாழ்க்கைதான் தனது ஆயுளின் ஆகப் பெரிய சொத்து என்று புளகாங்கிதப்பட்டார் டோனல்ட். 'கல்லூரியின் முதல் வருட வாழ்க்கை முழுக்க நான் அநியாயத்துக்கு கூச்ச சுபாவி. அப்போது எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள் அவள். க்ரீம் கலர் ஸ்வெட்டர் அணிந்து மிக மிருதுவான கூந்தலுடனும் தேவதைச் சிரிப்புடனும் வளைய வந்த அவளைச் சுற்றிலும் எப்போதும் அழகிய பெண்களின் கூட்டம்தான். அன்று காலேஜ் டே. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நடனமாடலாம். அவளை என்னுடன் டான்ஸ் ஆட அழைக்கச் சொல்கிறது மனதின் ஒரு மூலை. பலவந்தமாகப் பிடித்துப் பின்னிழுக்கிறது மூளை. ஒரு வேகத்தில் என் கூச்சம் தவிர்த்து அவளிடம் சென்று, 'நீதான் நான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்!' என்றேன். சின்ன ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டே என்னுடன் அப்போது டான்ஸ் ஆடினாள். அதன் பிறகு அடிக்கடி அவளைச் சந்தித்தேன். எனது விருப்பத்துக்குச் சம்மதிக்கவைத்தேன். 56 வருட ஹனிமூன்!
ஒருவேளை அந்த ஆரம்பத் தயக்கம் என்னைத் தடுத்திருந்தால், இன்று மரணப் படுக்கையில் 'அன்று அவளிடம் எனது ஆசையை வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ' என்ற ஏக்கம் மிச்சம் இருந்திருக்கும். இப்போது நான் மிகச் சுதந்திரமாக உணர்கிறேன். நான் என் வாழ்க்கையை முழுக்க வாழ்ந்திருக்கிறேன்!' என்றார் அர்த்தம் நிறைந்த சிரிப்புடன்.
3) அன்பின் வடிவமெடுங்கள்!
டேவிட் பகிர்ந்துகொண்ட இந்த அனுபவம் விசேஷமானது. 'எனது தந்தை தனியரு ஆளாக உழைத்து முன்னேறி கோடீஸ்வரனாகி எங்கள் குடும்பத்தையே உச்ச நிலைக்குக் கொண்டுசென்றவர். அவர் தனது மரணப் படுக்கையில் இருந்த கடைசி சில நாட்களில் அத்தனை வருடங்களில் தான் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தனது குழந்தைப் பருவம் முதல் இப்போது வரையிலான புகைப்படங்களைத் தன்னைச் சுற்றிப் பரப்பிவைத்துக் கொண்டார். அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த மனிதர்களுடனான தனது பாசப் பிணைப்பு குறித்து மட்டுமே பேசி நெகிழ்ந்துகொண்டு இருந்தார். அத்தனை பேரின் அன்பைச் சம்பாதித்ததைத்தான் தனது மிகப் பெரிய சாதனையாக நினைத்து, நிறைவான நிறைவை எட்டினார்!' அந்த நிறைவை எட்டுவதற்கு முதலில் நீங்கள் காதலிக்க வேண்டிய நபர் நீங்கள் தான்!
4) இந்த நொடி, இந்த நிமிடம் வாழுங்கள்!
ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வாழ்க்கை யாகத்தான் கணக்கில்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு இலக்கை அடையும் பயணத்தின் வழித் தங்கல் அல்ல ஒவ்வொரு நாளும்; அந்த நாளே ஓர் இலக்குதான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... குறிப்பிட்ட ஆனால், தீர்மானிக்கப்படாத வருடங்கள்தான் உங்கள் ஆயுட்காலம். அது 40 வருடமோ அல்லது 70 வருடமோ! அந்த வருடங்களின் எந்த ஒரு நொடி கடந்தாலும் அதை மீண்டும் நாம் திரும்பப் பெற முடியாது. உலகின் மிக உன்னத பொக்கிஷம் உங்கள் ஆயுளின் ஒரு நொடிதான். அப்படியிருக்க, அந்த தங்கத் தருணங்களை வெறுப்பு, கோபம், துவேஷம் என்று செலவழிப்பானேன். கொண்டாடுங்கள். உங்கள் சூழல் என்னாவாக இருந்தாலும் அதைக் கொண்டாட உங்கள் மனதைப் பழக்குங்கள்.
93 வயது ஜான் ஒவ்வொரு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் கண்டு களிக்கிறார். அந்தக் குதூகலத்தை 93 வயதில்தான் நாம் அனுபவிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே, அத்தனை வயது வரை நாம் மிஞ்சி இருப்போமா மாட்டோமா என்ற உத்தரவாதம் இல்லாத போது!
5) பெறுவதைக் காட்டிலும் அதிகமாகக் கொடுங்கள்!
அந்தச் சிறிய கிராமத்துக்கு கென் ஒருவர்தான் பார்பர். ஊரில் எந்த நல்லது கெட்டதுக்கும் கென்தான் கத்தியைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். அவரி டம் பேசிக்கொண்டு இருந்தபோது சிம்பிளாக ஒரே வரியில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொன்னார், 'இந்த ஊரில் யார் இறந்தாலும் நான் சென்று என் வேலையை முடித்த பிறகு தான் இறுதிச் சடங்குகள் துவங்கும். பல சமயங்களில் நான் எனது கத்தியைக் கழுவிப் பெட்டியில் வைப்பதற்குள் பத்து நிமிடங்களில் சடங்குளை முடித்து, கிட்டத்தட்ட இறந்தவரைத் துரத்தியடிப்பார்கள். ஆனால், சில சமயங் களில் 10 மணி நேரத்துக்கும் மேலாக சடங்கு களை நீட்டித்து இறந்தவரைப் பிரிய மனம் இல்லாமல் கண்களில் நீருடன் வழியனுப்பி வைப்பார்கள். காரணம், அவர் தன் வாழ்க்கை முழுக்கப் பிறருக்காக வாழ்ந்து இருப்பார். என் இறுதிச் சடங்கும் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது பேராசையாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்காகவே இந்த உலகத்தின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறேன்!' என்றார்.
இந்த உலகத்தின் மீது ஆசைவையுங்கள்... சொல்லப்போனால் அத்தனை ரகசியங்களிலும் இது மிகவும் சுலபமானது!
நன்றி - கி.கார்த்திகேயன்.
ஐந்தும் முத்துக்கள்...
ReplyDeleteபதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல...
முத்துக்கள் ஐந்தும் சொத்துக்கள்.நல்லதைச் சொன்னீர்கள் நண்பரே
ReplyDeleteஅருமையான பகிர்வு.... நன்றி...
ReplyDeleteஇப்படி இருந்தால் வெற்றி நிட்சயம் ! அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் சகோதரா .
ReplyDeleteஐந்து ரகசியங்களும், விளக்கங்களும் சூப்பர்.
ReplyDeleteநல்லது
ReplyDeleteஐந்து கருத்துக்களும் உண்மையே. டேவிட் கருத்து மிகவும் நெகிழ வைத்தது.
ReplyDeleteமிக நன்று
ReplyDeleteரகசியத்தை எங்ககிட்ட சொல்றதுக்கும் பெரிய மனசு வேணும். அந்த மனசு உங்க கிட்ட இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteஐந்து ரகசியங்கள் அறிய பெற்றோம் கருண்
ReplyDeleteபதிவை படித்ததோடு நின்றுவிடாமல் மனதில் பதிய வேண்டிய பதிவு!
ReplyDeleteரகசியங்களசொல்ல
ReplyDeleteதைரியம்
வேணும்அதுஉங்களிடம்
நிறைந்திருக்கு
பகிர்வுக்கு
நன்றி....!
அருமையான பதிவு நன்றி
ReplyDelete