உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த வாலி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 82 (18-07-2013).
நுரையீரலில் ஏற்பட்ட தொற்று, மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார் வாலி.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். அனுமதிக்கப்பட்ட முதல் இரண்டு நாட்களில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார் வாலி.
அதன் பின்னர் மீண்டும் அவருக்கு உடல்நிலை மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், சுமார் முப்பது நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.
அண்மையில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து வாலியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கவிஞர் வாலியின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மாலை 5 மணி அளவில் உயிரிழந்தார்.
15 ஆயிரம் பாடல்கள்
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு 'அழகர் மலைக்கள்ளன்' என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார் வாலி. அன்று தொடங்கிய வாலியின் திரையுலக வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. கவிஞர் கண்ணதாசன் ஒருபுறம் தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தனது தனித் திறமையால் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
தமிழில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்..., மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..."உள்ளிட்ட ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம்.
"புதிய வானம்... புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..., "ஏமாற்றாதே ஏமாறாதே..., நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்..., கண் போன போக்கிலே கால் போகலாமா.., காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்.., வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில்.., நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை..., நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்.., ஊர்வசி ஊர்வசி..., அம்மா என்றழைக்காத உயிரில்லையே..."என எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சித்தார்த் என இக்கால நடிகர்களின் படங்கள் வரை பாடல்கள் எழுதி உள்ளார்.
கடைசி பாடல்
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகும் படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அவர் எழுதிய பாடல்தான் கடைசி பாடலாகும்.
விருதுகள்
பத்மஸ்ரீ விருது-2007
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.
1970 – எங்கள் தங்கம்
1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
1989 – வருஷம் பதினாறு , அபூர்வ சகோதரர்கள்
1990 – கேளடி கண்மணி
2008 – தசாவதாரம்.
20 நூல்கள்
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது 20 நூல்களையும் எழுதி உள்ளார் வாலி.
எம்.ஜி.ஆர். - கருணாநிதி
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி ஆகியோர் அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்த நிலையில், இரண்டுபேரிடமும் நல்ல நட்புறவை வளர்த்துக்கொண்டவர் வாலி.
எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா - ஏ.ஆர். ரஹ்மான்
தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா ஆகிய இரு இசையமைப்பாளர்களின் இசையில்தான் வாலி ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார் என்றபோதிலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் இளமை துள்ளும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
வாலிபக் கவிஞர்
பத்மஸ்ரீ விருது, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் வாலி. 82 வயதானாலும் இன்றுவரை வாலிபக் கவிஞராகவே வலம் வந்தவர்.
பள்ளித் தோழர் சூட்டிய பெயர் வாலி!
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிரபல இதழில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?
அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை...
பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
கண்களால் தின்றாள்.
என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?
தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?” பலரின் மனதில் பசுமையாய்ப் இன்றும் பதிந்து கிடக்கிறதே?
ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி விகடனில் எழுதிய கவிதையை பலரின் மனதை தொட்டது.
மரபு வழியில் – ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,’ என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!
முன்பு நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்” என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் பெரிதும் விரும்புகிற ஒரு கவிஞர் மீது எனக்கிருக்கும் அன்பை , நானறிந்த வரையில் வெளிப்படுத்துகிற ஒரு எளிய முயற்சியே இது..எனக்கு தெரிந்த வரை உலகத்திலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை எழுதிய ஒரு கவிஞனைக் குறித்து அதிகம் எழுத, இன்னும் நிறைய படித்திருக்க வேண்டும் என்பதால், அதை என்னைக் காட்டிலும் அதிகம் படித்தவர்கள், அதிகம் தெரிந்தவர்கள் , கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இறக்கும் வரை இளைஞனாகவே வாழ்ந்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDeleteஒரு உண்மையான இலக்கியவாதியை இழந்துவிட்டது தமிழகமும், தமிழ் சினிமாவும்....
ReplyDeleteமறுக்க முடியாத மறக்க கூடாத தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளீர்கள்.வாலி அவர்களைப் பற்றி நிறைய விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteவாழும் கலைஞன்! வாலியெனும் கவிஞன்!!
ReplyDeleteகவிஞரின் ஆன்ம சாந்திக்காக வேண்டுகிறேன்.
உங்களுடன் ஆழ்ந்த அஞ்சலியில் நானும்.....
வாலிபக் கவிஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteவாலிக்கு எனது அஞ்சலி.
ReplyDeleteவெற்றிலை மென்று
ReplyDeleteசங்கக் கவி படைத்த
கொற்றவனே...உன்
விரல் மொழிந்த
வார்த்தைகள் எல்லாம்
மேவின என் உயிரெல்லாம்
காவியக் கவிஞனே ..
படைக்கப்பட்ட காவியங்கள் எல்லாம்
கூடிநின்று உனக்கு
முகாரி பாடட்டும்...
இனியொரு கவிஞன்
உனைப்போல
வருவானோ என
ஒப்பாரி முழங்கட்டும்...
நெஞ்சம் குமுறுகிறது அய்யனே..
உன் இழப்பை ஏற்றுக்கொள்ள இயலாது...
கவிஞரின் சிறப்புக்களை அழகாக எடுத்துரைத்த அஞ்சலிப்பதிவு! ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteஎனது ஆழ்ந்த இரங்கல்களும்....
ReplyDeleteவாலி ஐயாவைப் பற்றி நாள் பூராகவும் பேசிக் கொண்டே இருக்கலாம்.
ReplyDeleteஎன்னைப் பொறுத்த வரை, அவரின் தமிழ் மொழி ஆழம், பாடல் எழுதும் எந்தக் கவிஞருக்கும் இருந்ததில்லை.
"அவதார புருஷன்", "பாண்டவர் பூமி"
இரண்டும் போதும்.
சுருங்கக் கூறின், வாலி, முன்னரும் இல்லை. இனியும் இல்லை.