நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் ஏற்கெனவே ஆளும் அதிமுக சார்பில் 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும், அதிமுகவின் ஆதரவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜா தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், திமுக வேட்பாளராக கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கப் போதுமான சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத நிலையிலும், திமுக வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, தேமுதிகவும் வேட்பாளரை அறிவிக்கவே, ஆறாவது உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி அதிகரித்தது.
தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, விஜயகாந்த் தரப்பினர் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனை சந்தித்தனர். அவரும் தங்கள் தரப்பு ஆதரவை மேலிடத்தில் கேட்டு உறுதி செய்து தருவதாகக் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்பதும், 15 இடங்களுக்குக் குறையாமல் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்றும் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
மேலும், மத்திய ஆளும் கூட்டணியில் இருந்த திமுக, ஈழப் பிரச்னையைக் காரணம் காட்டி வெளியேறியதால், திமுக., மீண்டும் காங்கிரஸ் பக்கம் போக வாய்ப்பில்லை என்றும், அவர்களிடம் ஆதரவு கேட்க வாய்ப்பில்லை என்றும் செய்திகள் உலவின. எனவே தேமுதிக மேலும் சில சிறிய கட்சிகளின் ஆதரவைக் கேட்டுப் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய திடீர் திருப்பமாக, அதிமுக ஆதரவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி, தங்களது இரு உறுப்பினர்கள் திமுகவின் வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறி, இன்று சி.ஐ.டி காலனியில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தனர். இந்நிலையில், திமுக வேட்பாளருக்கான ஆதரவு பலம் 23+2 என 25 ஆன நிலையில், கனிமொழிக்கு மேலும் ஆதரவு திரட்டும் முகமாக, திமுகவினர் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அணுகினர். இன்று டி.ஆர்.பாலு, எதிர்பாராத திருப்பமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, தங்களுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக விஜயகாந்த் தன்னை சந்தித்தது குறித்து பேட்டி அளித்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறியிருந்தார். இதனால், சோனியா காந்தி எடுக்கும் முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அவர் திமுகவுக்கே அதரவு அளிக்கும் பட்சத்தில், காங்கிரஸின் 5 உறுப்பினர் ஆதரவும் கனிமொழிக்குக் கிடைக்கும்.. இதனால், மொத்தம் 30 உறுப்பினர் ஆதரவு அவருக்கு இருக்கும். ஆனால், மத்தியில் ஆளும் அரசுக்கு 2ஜி பிரச்னை பெரும் தலைவலியைக் கொடுத்ததால், 2ஜி முறைகேட்டுக்கான முழுப் பொறுப்பும் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவையே சாரும் என்பதாகக் கூறி, ஆளும் காங்கிரஸ் நழுவிக் கொண்டிருக்கும் நிலையில், இது சாத்தியமாகுமா என்பது கேள்விக் குறி.
மேலும், எந்த முறைகேட்டுக்காக கனிமொழி மீது காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டப்படும் சிபிஐ வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் நடந்து வருகிறதோ அதே கனிமொழியை திமுக தனது தரப்பு வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸுக்கு பெரும் நெருடலாக இருப்பதாகவே கருதப் படுகிறது. இந்நிலையில், சோனியா தனது ஆதரவைத் தருவரா என்றும் கேள்வி எழுப்பப் படுகிறது. இருப்பினும், சில பல பேரங்களையும் சமரசங்களையும் பின்னணியாகக் கொண்டு திமுக காய் நகர்த்தியிருப்பதாக தலைநகர் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதே நேரம், மீதமுள்ள இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும் பாமகவின் ஆதரவைப் பெற திமுகவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை தருமபுரியில் கட்சியினர் திரண்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, வரும் ஜூன் 21ம் தேதி சென்னையில் கூடும் பாமகவின் செயற்குழுவில் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும், திமுக, அதிமுக இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது பாமக என்று கூறினார்.
இருப்பினும், பாமகவின் 3 ஓட்டுகள் யாருக்கும் பயனின்றி சென்றுவிடக்கூடாது என்று கூறப்பட்ட நிலையில், இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமகவின் அன்புமணி ராமதாஸை சந்தித்து ஆதரவு கோரினார். எனவே, திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று முடிவு எடுக்கப்பட்ட நிலையில், பின்னணி சமரசங்களை அடிப்படையாகக் கொண்டு பாமக தனது ஆதரவை திமுகவுக்கு அளிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், கனிமொழியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது திமுக 23 + காங்கிரஸ் 5 + பாட்டாளி மக்கள் கட்சி 3 + மனித நேய மக்கள் கட்சி 2 என மொத்தம் 33 பேரின் ஆதரவு கிடைத்து விடும் நிலையில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றிருந்தாலும்கூட, தற்போது, அரசுடன் அதிருப்தியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று திமுக நம்புகிறது. அதனால் அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் இந்தக் கணக்கு சரியாக அமைந்தால், கனிமொழி மீண்டும் எம்.பி.யாவது உறுதியாகிவிடும். இந்தத் தேர்தலையும், கனிமொழி எம்.பி. ஆவதையும் தனது கௌரவப் பிரச்னையாக திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் பலமாகப் பேச்சு அடிபடும் நிலையில், திமுக அதற்காக உறுதியாக செயல்படும் என்று தெரிகிறது.
நன்றி இணைய செய்திகள்
நன்றி இணைய செய்திகள்
கனிமொழி தகுதியான பெண்மணி என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள்
ReplyDeleteதிமுகா-வில் கனிமொழியை விட்டால் வேறு ஆளே இல்லையா? திருட்டுக் குடும்பம்.
ReplyDeleteவேறு வழியே இல்லை...
ReplyDeleteஎக்கேடோ போயி தொலையட்டும்
ReplyDelete