Ads 468x60px

4/07/2017

புதிய இந்தியா

ஓர் அரசின் தலைமை செயலாளர், மந்திரிகள், உயர் அதிகாரிகள் என பலர் வருமான வரி சோதனை உள்ளாவது அநேகமாக தமிழகத்தில் தான் என நினைக்கிறேன்.

 ஒரு பக்கம் தமிழக கஜானா காலி, மறுபக்கம் கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விளக்கம் கேட்கிறது வருமானவரி துறை.

 கருப்பு பணம் மற்றும் ஊழல் ஒழிப்பை அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து தான் துவக்க வேண்டும் மக்களிடம் இருந்து அல்ல என்பதையே இந்த சோதனைகள் உணர்த்துகின்றது.

அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழல்கள் தான் இவர்களிடம் பணம் புழங்க காரணம்., கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என சாதாரண மக்களை தெருவில் நிற்க வைத்த மத்திய அரசு, நாடெங்கும் மத்திய மாநில அரசுகளின் டெண்டர்களில் நடக்கும் ஊழல்களை தடுக்க வேண்டும். 

லட்சம் கோடி மதிப்புடைய அரசு டெண்டர்களில் நடக்கும் ஊழலை தடுத்தால் மட்டுமே , புதிய இந்தியா உருவாகும்.

3/08/2017

மகளிர் தினம்

"கல்யாண மண்டப ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடகியாக வந்த பெண்"

"ஹோட்டலில் எதிர் மேசையில் அமர்ந்து மெனு கார்டை மட்டுமே முப்பது நிமிடம் பார்க்கும் பெண்"

"பீச்சில் கை காட்டு ராசான்னு பக்கத்தில் உட்கார்ந்து குறி சொல்லும் பெண்"

"பப்பில் பீர் பாட்டிலை வாயில் ஓபன் செய்யும்  பெண்"

"ஸ்மோக்கிங் சோனில் லைட்டர் கேட்டு ஸ்டைலா  சிகரெட் பற்ற வைக்கும் பெண்"

"நல்ல மழையில் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கும் பெண்"

"திருவிழாக் கூட்டத்தில் முதல்முறை தாவணி உடுத்தி முந்தானை சரி செய்யும் பெண்."

"ஷேர் ஆட்டோவில் அருகில் அமரும் பெண்"

"அழகு நிலையத்தை ஒரு நமட்டுச் சிரிப்போடு கடந்து செல்லும் பெண்"

"ஒரு பனகல் பார்க் என்று 12 பி பேருந்தில் பத்து ரூபாய் நோட்டு நீட்டும் பெண்"

"அசடு வழிந்துகொண்டே வங்கியில் பேனா கடன் கேட்கும் பெண்"

"கடைசி இரண்டு முழம் மல்லிப்பூ பத்து ரூபாய் வாங்கிக்கோங்க என்று தி.நகர் பஸ்ஸ்டாண்டில் மன்றாடும் பெண்"

"ஒரு கையில் குழந்தையோடு மறுகையில் சிமென்ட் கலவை சுமக்கும் பெண்."

" துப்பட்டா செயின்ல மாட்டிக்க போவுது என்று எச்சரித்து விட்டு சிக்னலில் நிக்கும் போது ரொம்ப நன்றிங்க என்று சினேக பார்வையோடு நன்றியை வீசும் பெண்.."

"துணிக்கடையில் 32 சைஸ் பிரா என்று ராணுவ ரகசியம் போல மிக மெதுவாக கேட்டு விட்டு தான் கேட்டது மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதா? என்று திருதிருன்னு  முழிக்கும் பெண்"

"தான் அழகுனு எந்த இடத்துலயும் காட்டிக்காம ஆணவம் இல்லாம கடந்துபோற பெண் "

"பேருந்து பயணத்தில் புன்னகையை வீசி சென்ற பெண்"

" பாஸ்போர்ட் ஆபீஸில் சந்தித்த பெண்"

"காதலை அளவுக்கு அதிகமாக காட்டிவிட்டு பிரிந்து சென்ற பெண்"

"எத்தனை முறை சண்டை போட்டாலும் தேடிவந்து பேசும் பெண் "

இந்த பெண்கள் அனைவருமே அவ்ளோ அழகு.
அழகு என்றாலே பெண்தான் .

இப்படி

தாயாக, சகோதரியாக, தோழியாக, குழந்தையாக.. எங்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட அனைத்து பெண்களுக்கும் நெஞ்சம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

1/31/2017

வனிதா என்கிற மாணவி


வழக்கம் போல வகுப்பில் முதல் பீரியட், 
அட்டன்டன்ஸ் எடுத்துக்  கொண்டிருந்தேன். 
சாரு.. பிரசன்ட் சார்,
தீபா... பிரசன்ட் சார்,
ஜோதி... பிரசன்ட் சார், 
ரமேஷ்... பிரசன்ட் சார்,
வனிதா....
வனிதா...

சார் வனிதா இன்னைக்கு ஸ்கூல் க்கு ஆப்சென்ட் சார்.

ஒ, அப்படியா? ஜோதி, நீ வனிதாவுக்கு க்ளோஸ் பிரன்ட் தானே, வனிதா ஏன் ஒரு வாரமா ஸ்கூல் க்கு வரல? உன்கிட்ட எதுனா காரணம் சொன்னாளா?
இல்லை சார்.

ஒரு ஒழுக்கமான மாணவி, கிளாஸ் பஸ்ட் எடுக்குற பொண்ணு, தேவை இல்லாமல் லீவ் எடுக்காத பொண்ணு, இப்படி எக்ஸாம் நேரத்துல எதுக்கு லீவ் போடுறா? 
இப்படியான கேள்விகள் மனதுக்குள் நிழலாடியது. 

சரி இன்னைக்கு ஈவ்னிங் அவ வீட்டுக்கு போய் காரணம் என்னன்னு தெரிஞ்சிட்டு வரணும் ன்னு முடிவுபன்னி அன்றைய வகுப்பில் பிசியாகிப் போனேன்.

ஆனால் அன்று ஈவ்னிங் வனிதா வீட்டிற்கு வேறு வேலைகள் காரணமாக போகவில்லை. இல்லை மறந்துவிட்டேன்.

மறுநாள் வழக்கம் போல வகுப்புக்கு போனேன்.

இன்று வனிதா வந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் மனதுக்கு நிம்மது ஆயிற்று. 
ஆனால் வழக்கமான வனிதா அங்கே மிஸ்ஸிங்.

ஒருவித பொலிவுடனும், சிரிப்பு முகத்துடன் காணப்படும் வனிதா, அன்று சோகமாக காணப்பட்டாள். காரணம் அறிய அவளை அழைத்து பேசினேன்.

வனிதா, ஏன் சோகமா இருக்க? ஒரு வாரம் லீவ் வேற போட்டுருக்க, உடம்பு ஏதாவது சரி இல்லையா? சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு? 
நான் வேற நம்ம எச் எம் கிட்டேயும், மற்ற ஆசிரியர்கள் கிட்டேயும், என்னுடைய வகுப்பு பொண்ணு வனிதா தான், இந்த வருடம் ஸ்கூல் பஸ்ட் வருவா ன்னு சபதம் வேற போட்டிருக்கேன். நீ வேற இப்ப அடிக்கடி லீவ் போடற, என்னை அசிங்கப் படுத்திடுவே போல இருக்கே? என்றவுடன், உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

சார் வீட்ல பிரச்சனை சார், அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை சார் என்றாள். ஐயோ வனிதா எல்லார் வீட்டிலையும் பிரச்சனைகள் இருக்கு அதை ஏன் பெரிதுபடுத்துகிறாய் என்றேன்.

அந்த அழுகையும், விசும்பளும் அதிகம் ஆயிற்று. சார் எங்க அப்பாவைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும். பயங்கர சந்தேகப்பிராணி சார் அவர், 

சாப்பாடு உப்பு கம்மியா இருந்தா அடி, ருசியா இல்லையா உதை, 
எங்கம்மா அழகு, அதற்கேற்றமாதிரி டிரஸ் பண்ணா , என்னடி இது தெவிடியா மாதிரி அலங்காரம் ன்னு, வயதுக்கு வந்த பொண்ணு இருக்கேனேன்னு கூட பாக்காம என் முன்னாடியே திட்டுவார். 

சும்மா வெளிய வேடிக்கை பார்த்தா கூட , யாரை எதிபார்த்து நிக்கற ன்னு அசிங்கமா கேட்பாரு. இப்படிப்பட்ட அப்பா சார் எனக்கு, இருந்தாலும் எங்க அம்மாவிக்காக இதை எல்லாம் பொறுத்துக்கொண்டு நான் படிப்பில் கவனம் செலுத்துவேன். அது உங்களுக்கு தெரியும், என்று சொல்லி சில நிமிடம் பேச்சை நிறுத்தினாள், நான் உடைந்து போயிருந்தேன்.

ஆனால் போன வாரம் பிரச்சனை பெருசாயிடுச்சி, அதனால்தான் என்னால ஸ்கூல் க்கு வரமுடியல என்று மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

சரி, போன வாரம் என்னதான் ஆச்சு சொல்லு என்றேன்.

போன வாரம் ஞாயிறு காலையில கறி சமைச்சு வெக்கல ன்னு எங்கப்பா அம்மாட்ட சண்டை போட்டு இருந்தாரு நானும் வழக்கமான சண்டை தானேன்னு, ரூம்குள்ள போய் படிச்சிட்டு இருந்தேன். அப்பா கொஞ்சநேரம் சண்டை போட்டுட்டு வெளியில எங்கோ கிளம்பி போயிட்டாரு. அன்னைக்கு மதியமும் வீட்டுக்கு வரல, நைட்டும் ஒன்பது மணி வரைக்கும் வரல, சரி நாங்க ரெண்டு பேரும் சாப்ட்டு படுத்துடோம்.

காலையில எழுந்து பார்த்தா எங்கம்மா முக்காடு போட்டுட்டு அழுதுட்டு இருந்தாங்க. என்னம்மா, என்னாச்சு நைட்டு, ஏம்மா அழறன்னு, கேட்டவுடன், அம்மா அந்த முக்காடு எடுத்தாங்க, பார்த்தவுடன் நான் மயங்கி விழுந்துட்டேன் சார் என்றாள்.

எனக்கு ஒன்னும் புரியல, என்னாச்சு என்றேன். 
சார் எங்கப்பா அன்னைக்கு குடிச்சிட்டு வந்து, எங்கம்மா கூந்தல் முடியை வெட்டிட்டாரு. அன்னைக்கு அரைகுறை முடியோக எங்கம்மா அழுத அழுகை இப்போ நினைச்சாலும் எனக்கு கண்ணீருக்கு பதிலா ரத்தம் வருது என்று மறுபடியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

கண்ணீர் வழித்தொடியது வனிதாவிற்கு... 
கலங்கிப்போய் நின்றிருந்தேன் நான்...


1/18/2017

ஜல்லிக்கட்டு அரசியல்

அருமை தமிழ் சொந்தமக்களே ...
போராட்டம் தொடங்கி விட்டது. மத்திய அரசை மாநில அரசு கேட்டுக் கொள்ளும், மத்திய அரசு அவசர சட்டம் இயற்றும். அப்புறம் பீட்டா அமைப்பு நீதிமன்றில் வீற்று இருக்கும் கல்லுளி மங்கன்களுக்கு கொடுப்பதை கொடுத்து மீண்டும் தடை கொண்டு வர செய்யும். ஆகவே இங்கு மாநில அரசுடனோ , மத்திய அரசுடனோ பேச ஒன்றும் இல்லை.

முதலில் காளை வீட்டில் தனது பிள்ளை போல வளர்க்கப்படும் வீட்டு விலங்கு. அதை காட்சிப்படுத்தும் வன விலங்கு பட்டியலில் இருந்து காங்கிரசின் மர மண்டை ரமேஷ் போட்டதை இன்றைய பி ஜெ பி அரசு எடுத்து விடணும். அப்புறம் ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் கலாச்சாரத்துடன் இரண்டற கலந்த ஒன்று, பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் எவன் ஆவது உலகில் கொண்டாடுகிறானா தமிழனை தவிர?? இந்த மாதிரி பொங்கலுக்கு விடுமுறை விட்டால் குடிப்பதை தவிர வேறு என்ன செய்வார்கள் காட்டு மிராண்டி தமிழன் என்று கொச்சை படுத்துவதை விடுத்து தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் இவற்றை மத்திய அரசு மதிக்கணும், மிதிக்க கூடாது.
 எத்தனை வன விலங்குகள் கொடுமைப் படுத்தப்படுகின்றன உலக நாடுகளில். அதை தட்டி கேட்காமல் தமிழன் பண்பாட்டுடன் இணைந்த காளையை ஒழிக்க ஒற்றைக் காலில் நிற்கும் இந்த வெளி நாட்டு அமைப்புகள் உடன் தடை செய்யப்பட்ட வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநில அரசையே கலைக்கணும் என்று ஒரு வெளி நாட்டு அமைப்பு கேட்கிறது என்றால் எவ்வளவு தெனா வெட்டு இவங்களுக்கு. இது பன் நாட்டு கம்பெனிகளின் சதி தவிர வேறு எதுவும் இல்லை. ஊசியில் பிறப்பவர்கள், அப்பாவை என்றும் கண்டு இராதவர் தான் இப்படி செயல்பாடுகளில் ஈடுபடுபவர். தீர்வு என்றால் இனி ஜல்லிக்கட்டு பற்றி எவனும் பேச கூடாது. கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றுக்கு என்ன வேலை?? மக்கள் எப்படி வாழ வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை உடுத்தணும் என்று சட்டம் சொல்லும் ஆக இருந்தால் அது சர்வாதிகார ஆட்ச்சி. சட்டம் மக்களை நல்வழிப்படுத்தவே, மக்களை அடக்கி ஆள இல்லை. 

நீ சிங்கத்தை பிடித்து விளையாடு என்று ஒரு நீதிபதி கூறுகிறார் என்றால் அவருக்கு சட்டமும் தெரியவில்லை, எதை பற்றி பேசுகிறார் என்றும் தெரியவில்லை மூளை குழம்பி போய் உள்ளார் என்றே அர்த்தம். நீதி விற்பனைக்கு வந்து விட்ட பிறகு போராடி தான் உரிமைகளை நிலை நாட்டணும். தமிழனுக்கு சேர வேண்டிய நதி நீர் மறுப்பு, நீர் இன்றி, பயிர் வாடி, பெற்ற கடன் மீள செலுத்த வழி இன்றி விவசாயி தற்கொலை, ஆற்று மணல் அள்ளி விற்று கொள்ளை லாபம் பார்க்கும் அயல் மாநிலம் சார்ந்த அதிகார வர்க்கம் தமிழன் நாட்டில், மக்கள் எப்படி போனால் என்ன கிடைத்த வரை லாபம் என்று பங்கு போட்டு கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் , நாம் அவர்களை கலையும் படி சொன்னோம், ஆனால் அவர்கள் தொடர்ந்து அமைதி வழியில் போராடி எம்மை கோபப்படுத்தியதால் தடியடி நடத்தினோம் என்று சொல்லும் வெளிமாநிலம் சார்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் என்று எண்ணற்ற வகையில் தமிழ்நாடு இன்று அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

தமிழன் வாழ்வும் கேள்விக்குறி ஆகி விடும் இப்படியே போனால். நாளை மனிதன் இங்கு வாழ முடியாத நிலை வரும் போது அயல்மாநிலத்தவன் அங்கு சென்று பசி ஆறுவான். ஆனால் சொந்த மாநிலத்தவன் தமிழன் எங்கு செல்வது?? அகதி ஆக நாடு நாடு ஆக அலைவதா?? போய் பாரு தெரியும். ஏனடா சொந்த பூமியை விட்டு வந்தோம் என்று தற்கொலை செய்யும் நிலைக்கு சென்று விடுவாய். சிரிய அகதிகள் படும், பட்ட கேவலம் பார்த்தால் உனது பூமியை நீயே சரி செய்ய புறப்பட்டு விடுவாய். 

உரிமை மறுப்பு வரும் போது ஜாதி ஏது, மதம் ஏது? பசிக்கு எந்த வேறுபாடும் தெரியுமா?? ஒற்றுமையாக தமிழர் நாம் இணைந்து வென்று எடுப்போம் உரிமைகளை. வீழ்வது நாம் ஆகினும் வாழ்வது உலகின் முதல் மொழி ,எம் மொழி செம்மொழி தமிழ் ஆகட்டும். கொட்டட்டும் முரசு, முழங்கட்டும் சங்கு, வெற்றி நமது ஆகட்டும், நாளைய பொழுது நல்ல பொழுதாக, நமக்கு விடியட்டும்.

12/28/2016

பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு,என் பிள்ளைக்கு இந்த கோர்ஸ் செட் ஆகுமா?, எதுக்கு வேலைவாய்ப்பு அதிகம்?, கேம்பஸ் இன்டர்வியூக்கள் எந்தக் கல்லூரியில் அதிகம் நடக்கிறது?, இந்த கோர்ஸுக்கு எந்தக் கல்லூரியில் படிப்பது நல்லது? இப்படி பல கேள்விகள் பெற்றோரின் மன ஓட்டத்தில் பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

மேலே கூறிய எல்லா கேள்விகளும் கேட்கப்பட வேண்டியவையே, ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி ஒன்று நம் நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை.

"உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?" - வாழ்வை அமைக்கும் கேள்வி அது.

உடை பிடிக்கிறதா, உணவு பிடிக்கிறதா என்ற கேள்விகளை தன் பிள்ளைகளிடம் கேட்கின்ற பெற்றோர்கள் ஏன் 'நீ என்னவாக விரும்புற, உன் ஆசை என்ன?' என்று கேட்பதில்லை.

பிள்ளைகளின் ஆசை என்னவென்றே அறியாமல் முடிவெடுப்பது ஒரு பிழை என்றால், 'தம் பிள்ளைக்கு இது படிக்கத் தான் ஆசை, தம் பிள்ளைக்கு இப்பிரிவில் நிறைய திறமைகள் இருக்கிறது, இவனுக்கு இதை படிக்க வேண்டும் என்று விருப்பம்' இப்படி பிள்ளைகளின் கனவை உணர்ந்தும் பெற்றோர் முரண்பட்ட முடிவை எடுப்பதினை பேதமை என்றே உரைக்கலாம்.

பிடிக்காத ஒரு படிப்பினை நாம் படிக்கும்போது மனதினில் வெறுப்பு தான் ஆட்கொள்கிறது. அப்போது கல்வியும் வெறும் மதிப்பெண்ணை பெற்று வேலையைப் பெறுவதற்கான ஒரு மாற்றுப் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பிடிக்காத படிப்பினை எடுத்து அப்பிரிவிலே வேலைப் பார்க்கப் போகும்பொழுது பார்க்கின்ற வேலையில் பற்றற்று போகின்றது. கடைசி வரை பல பேரின் வாழ்க்கை 'அட்ஜஸ்ட்மென்ட்' என்ற முறையினாலேயே நகர்த்தப்படுகிறது.

யோசித்துப் பார்த்தால் இப்படி வாழ்க்கையை புளிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமாக இருப்பது பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நாம் எடுத்த அந்த ஒரு முடிவு தான்.

குழந்தை எடுத்து வைக்கின்ற முதல் அடி போல் ஒரு கல்லூரி, மற்றும் எடுக்கப்படுகின்ற பிரிவு ஆகியவை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒரு மீனவனின் மகன் எரோனாடிகல் படிக்க வேண்டுமா? அப்படிப் படித்தால் என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? அதற்கு மாறாக கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாமே என்று எண்ணினால் நமக்கு அப்துல் கலாம் எப்படிக் கிடைத்திருப்பார்?

கல்வியின் அடிப்படைத் தேவையை பொருளாதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பிதற்றலானது. இன்று நாம் அனைவரும் வாழக் காரணமாக இருப்பது விவசாயம். ஆனால் விவசாயத்தை பற்றி படிப்பதாக ஒரு மாணவன் கூறினால் சிரிக்கிறார்கள். நம் தேசத்தின் அடையாளமே விவசாயம்தான் என்பதை அறியாதவரின் அறியாமைச் சிரிப்பு இது.

ஒரு பெண் மெக்கானிக்கல், சிவில் படிக்க ஆசைப்படுகிறேன் என்றால் ஏளனமாக சிரிக்கின்றார்கள். கல்பனா சாவ்லாக்களை அறியாதவர்களின் அறியாமைச் சிரிப்பு அது.

மேலும், மீடியா தொடர்பாகப் படிக்கப் போகிறேன், கலைப் பிரிவில் படிக்கவிருக்கிறேன், நர்சிங் படிக்க விழைகிறேன், தமிழ் படிக்க விரும்புகிறேன் என ஒரு மாணவர் கூறினால் அவர் மனக்கோட்டையை சிதைப்பதில் இச்சமுதாயத்திற்கு பெறும் பங்கு இருக்கிறது.

'என் மகன் இந்த காலேஜ்'ல இந்த கோர்ஸ் படிச்சு இப்ப சந்தோஷமாக இருக்கிறான் சின்ன பசங்களுக்கு என்ன தெரியும்? உங்க மகனையும் அதுவே எடுத்து படிக்கச் சொல்லுங்க' இப்படி எதாவது கூறி பெற்றோரின் மனக் குட்டையில் கல்லை எறியும் கூட்டத்தின் தவறான அறிவுரையால் இன்று பல பிள்ளைகளின் வாழ்வியல் பாதிப்படைகிறது, இன்னும் அடைந்து கொண்டே இருக்கிறது.

கல்வியின் அவசியத்தை பாராமல் ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இதைப் போன்ற கமர்ஷியல் கணவான்களின் பேச்சை காதில் போட்டுக் கொள்ள கூடாது.

உண்மையில் எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு வருங்காலத்தை பற்றிய தெளிவான எண்ண ஓட்டம் இல்லை என்று கூறுபவர்கள் கண்டிப்பாக பெற்றோர்களின் அறிவுரையை எடுத்துக் கொள்ளலாம், தவறே இல்லை. அப்படி எடுத்துக் கொண்ட பாதையில் தன் திறமையை உணர்ந்து சாதித்தவர்கள் பலர்.

எனக்கு இது தான் ஆசை, இது தான் விருப்பம், இதில் நான் கண்டிப்பாக சாதிப்பேன் என்ற மன உறுதி கொண்டவர்கள் கண்டிப்பாக தன் வேட்கையை பெற்றோர்களிடம் உரைத்து அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களின் நிலைப்பாட்டை உங்கள் பெற்றோர்களிடம் உங்களால் விளக்க முடியவில்லை என்றால் எப்படி வெளியுலகிற்கு புரியவைப்பீர்கள்?

விருப்பமில்லாத படிப்பை படித்து நீங்கள் உங்கள் வாழ்வை மட்டும் சிதைத்துக் கொள்ளவில்லை, அப்படிப்பு படிக்க தீவிரமாக முயற்சித்த மற்றொரு மாணவனின் கனவையும் சேர்த்து சிதைக்கின்றீர்கள். நான் இது தான் படிக்கப் போகிறேன் என் ஆசை இது என்பதை கேட்பவர்களிடம் ஆணித்தரமாக சொல்லுங்கள் அப்படிச் சொல்கையில் உங்களுள்ளே தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட பாதையில் வெற்றி பெறுவதற்கான வேட்கை கூடும்.

நான்கு வருடம் முடித்துவிட்டு நான் இன்ஜினியரிங் படித்திருக்கக் கூடாது என்றுணரும் பொறியியலாளர்களும், ஆறரை வருடம் கழித்து மருத்துவம் படித்திருக்கக் கூடாது என்றுணரும் மருத்தவர்களும் நம் ஊரில் ஏராளம். படிக்கையில் இனிமேல் எனக்கு இது ஒத்துவராது என்று பாதி வழியிலே விலகிக் கொண்டவர்களும் ஏராளம்.

தன் காதலை இழந்துவிட்டோம் என்று மேசையில் தலை சாய்த்து அழுபவர்கள், பேருந்தில் ஜன்னலிலே சாய்ந்து கொண்டு விழி நீர் இறைப்பவர், மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு தன் கையாலாகத் தனத்தை உணர்ந்து தனிமையில் அழுபவர்கள் நம் நாட்டில் பலர் உள்ளனர்.

தன் பிள்ளை விழுந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சி அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வுணர்ச்சியே அவர் பிள்ளைகளின் வாழ்விற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடக் கூடாது. யாரோ மூன்றாவது நபர் கூறும் பேச்சிற்கு மதிப்பளிக்கும் நீங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆசைக்கும் கொஞ்சம் மதிப்பளியுங்கள். அப்படியே அவர்கள் எடுத்துக் கொண்ட பாதையில் விழுந்தால் கூட வீழமாட்டார்கள் எழுந்து கொள்வர் ஏனென்றால் இது அவர்கள் எடுத்த முடிவு என்ற அச்சமும், கடமையும் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

பசி இழந்து, உறக்கம் இழந்து, சுகவாசத்தை இழந்து, பொழுது போக்கினை இழந்து நாளும் பிள்ளைக்காகவே வாழ்ந்து தேயும் பெற்றோர்களே... உங்களின் ஆசை எல்லாம் உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தானே! அப்படி இருக்கையில் ஒரு முறை உங்கள் பிள்ளைகளின் ஆசையை கேளுங்கள். கண்டிப்பாக எந்த பிரிவு எடுத்தாலும் அதில் காதல் இருந்தால் சாதிக்கலாம்; சாதித்தவர்களும் பலர். உங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் பிரிவில் சாதித்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா படிப்பிற்கும் அவசியம் உண்டு, எல்லோர் வாழவும் வழியுண்டு. என்ன, கொஞ்சம் தேட வேண்டும் அவ்வளவே.

ஆயிரத்து நூற்றிக்கு மேல் மதிப்பெண் எடுத்தால் ஆர்ட்ஸ் படிக்கக் கூடாதா என்ன? ஆயிரத்து நூறு மதிப்பெண் மேல் எடுத்து பிடிக்காத பிரிவில் படித்து சரிந்தவர்களும் இருக்கின்றனர், அறுநூறு மதிப்பெண் எடுத்து வாழ்வில் சாதித்தவர்களும் பலர் உள்ளனர். பெயர் பெற்ற கல்லூரியில் பிடிக்காத பிரிவை எடுத்துப் படிப்பதை விட சுமாரான கல்லூரியில் பிடித்த படிப்பை படிப்பதே மேலானது.

ஒரு சிறிய விண்ணப்பம்.. மதிப்பெண் வெளிவந்துவிட்ட நிலையில், "அய்யய்யோ.. இயற்பியல்ல பத்து மார்க் குறைஞ்சிடுச்சி, வேதியல்ல இரண்டு மார்க் போச்சு..."

இந்தக் கவலையை எல்லாம் விடுங்கள். உங்கள் பிள்ளை என்ன மதிப்பெண் எடுத்திருந்தாலும், அது அவரின் உழைப்பு. அந்த உழைப்பிற்கு மதிப்பளித்து தேர்வு முடிவு வரும் வரை காத்திருங்கள். நன்கொடை கொடுத்து படிக்கப்படும் படிப்பு அறிவை வளர்ப்பதை விட அச்சத்தைத்தான் வளர்க்கும்.

பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்ற உங்கள் அன்பு புரிகிறது. அப்படியே உங்கள் பிள்ளைகளின் மனதையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, அவர்களின் எதிர்காலத்திற்கு 'முடிவாக' இல்லாமல் நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்தப் புலம்பல்கள், பெற்றோர்கள் பலருக்கும் 'மொக்கை' கடிதமாகத் தெரியலாம். ஆனால், சில பல ஆண்டுகளுக்கு முன்பு கிரியேட்டிவ் ஃபீல்டில் நுழைவதற்காக ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்த ஒரு பிளஸ் 2 மாணவன், நிர்பந்தத்தின் காரணமாக வேறு படிப்பு படித்து, இப்போது ஓர் ஐ.டி. நிறுவனத்தில் போதுமான ஊதியத்துடன் வெறுமையான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கிறான். வெளியுலகுக்கு பந்தாவானவனாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் நொந்தவனாகவும் இருக்கும் இந்த நிலை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கும் வேண்டுமா?

ஹரி - nanaprabhu5591@gmail.com