Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/30/2018

"தொப்பைக்கான " காரணங்களும் தீர்வும் - ஒரு அலசல்



"தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்" என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்காமல் கண்டவற்றையும் வயிற்றில் கொட்டிக்கொண்டு, தொப்பை விழுந்த பிறகு ஜிம்மே கதியெனக் கிடக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். சிலரோ தொப்பையைப் பற்றிக் கவலைப்படாமல், சற்று பெரிய சட்டையைப் போட்டு அட்ஜஸ்ட் செய்துகொள்வது அல்லது பெல்ட்டை போட்டுக்கொள்வது எனச் சமாளிக்கிறார்கள். 

ஆனால், தொப்பை (Central Obesity) வெறும் அழகுப் பிரச்னை மட்டுமல்ல, அதை மறைத்துக்கொண்டு தப்பிப்பதற்கு. "இது நீங்கள் வயிற்றில் சேமித்துவைக்கும் தேவையற்ற கொழுப்பு. தொப்பை, இதயநோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகி, உயிருக்கே உலை வைக்கலாம்" என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். தவறான உணவுப் பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்துபோவதும் சேர்ந்து நவீன இந்தியர்களை, "தொந்தியர்"களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன

நம் உடலில் தோல்புறக் கொழுப்பு (Subcutaneous Fat), உட்புறக் கொழுப்பு (Visceral Fat) என இரண்டு வகைகள் உள்ளன. தோலின் அடியில் உள்ள கொழுப்புப் படலம்தான் தோல்புறக் கொழுப்பு. குடலின் வெளிப்புறம் ஒட்டிக் கொண்டிருப்பது உட்புறக் கொழுப்பு. பொதுவாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு தேங்குவதைத்தான், "தொப்பை" என்கிறோம்.

உடல் என்னும் உயிர் இயந்திரம் இயங்க, ‘கலோரி’ என்ற எரிபொருள் (ஆற்றல்) தேவை. கலோரியை, நாம் உண்ணும் உணவின் வழியாக உடல் பெற்றுக்கொள்கிறது. நாள் முழுவதும் உடல் இயங்குவதற்குத் தேவையான அளவையும் தாண்டி கலோரிகள் கிடைக்கும்போது அவற்றை மூளை வீணடிக்க விரும்பாது. அவசரக் காலத்தில் பயன்படுத்திக்கொள்வதற்காக அவற்றைக் கொழுப்பாக மாற்றி, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைக்க உத்தரவிடும்.

பெரும்பாலும், நம் உடலிலுள்ள மரபணுக்களே (Genes), நமது உடலில் எந்த இடத்தில் கொழுப்பு செல்கள் படிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதனால்தான் மரபுரீதியாக பலருக்குத் தொப்பை தொடர்கிறது. அத்துடன் கொழுப்புப் படிவதற்கு ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) என்ற ஹார்மோனும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோனும் காரணமாகின்றன. ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பிலும் இடுப்புக்குக் கீழேயும் அதிகமான கொழுப்புப் படியும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுவதால், அவர்களுக்கு வயிற்றிலும் கொழுப்பு படிய ஆரம்பிக்கிறது.

உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய், பக்கவாதம், புற்றுநோய் உள்படப் பல்வேறு பிரச்னைகளுக்கும் தொப்பை நுழைவாயிலாக மாறிவிடுகிறது. இதைத் தவிர பித்தப்பைக் கற்கள், மூட்டுவலி, அதீத மன அழுத்தம், கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை, தைராய்டு மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தொப்பையைக் குறைப்பதில் முறையான உணவுப் பழக்கங்களும் பின்பற்றப்பட வேண்டும்.

* முதலில் அதிக அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தைத் தக்கவைப்பதுடன் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். மேலும், தண்ணீரானது வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்.

* தொப்பை இருக்கிறது என்று உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்து. அது நொறுக்குத்தீனிகளை உண்ண வழிவகுத்துவிடும். சரியான நேரத்துக்கு, சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும்.

* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை உணவுக்கு முன் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டால் உண்ணும் உணவின் அளவு குறையும்.

* காபி, டீ போன்ற பானங்களை அருந்தக் கூடாது. இதிலுள்ள கஃபைன், இன்சுலின் அளவை அதிகரித்து செரிமானத்தைத் தாமதமாக்கும். அதற்குப் பதிலாக ஹெர்பல் டீ, லெமன் டீ, கிரீன் டீ ஆகியவற்றில் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். வெந்நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.

* வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகப் பனைவெல்லம், தேன் போன்றவற்றை அளவாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

* சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பகல் தூக்கம் கூடாது. சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் குறுநடை போடலாம்.

* அரிசி, கிழங்கு போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு, சம்பா ரவை, ஓட்ஸ், பார்லி கஞ்சி போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* தொலைக்காட்சி பார்த்தபடியோ, செல்போனில் பேசியபடியோ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால், சாப்பிடும் உணவின் அளவு அதிகரிக்கும். சாப்பிடும் உணவில் கவனம் செலுத்திச் சாப்பிட வேண்டும்.

* பால் பொருள்களில் கலோரிகளை அதிகரிக்கும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்து மோர், யோகர்ட் (கொழுப்பு நீக்கப்பட்ட தயிர்) போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சாப்பிடும் உணவில் உப்பு, எண்ணெயின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 15 மி.லி எண்ணெய் போதுமானது. சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

* கேக், வெள்ளை பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகள், மைதா, ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

* நமது அன்றாட உணவில், பழங்கள், பச்சை நிறக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவற்றிலுள்ள நார்ச்சத்து ஜீரணமண்டல இயக்கத்தைச் சீராக்கும்.

* செயற்கைக் குளிர்பானங்கள், ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை இருக்கிறது. இது, உடலில் கலோரியை அதிகரித்துத் தொப்பையை உருவாக்கும்.

* தொப்பை குறைய, தினசரி அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் நீச்சல், சைக்கிள் பயிற்சியும் நல்லது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும்.

* மதுப்பழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தகவல்கள் இணையத்திலிருந்து தொகுக்கப் பட்டது.


 ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுவோம். நலமுடன் வாழ்வோம்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"