இன்றைய மாணவர்கள் சமுதாயத்தில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவது அனைத்து பெற்றோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று சென்னையில் ஒரு மாணவியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக ஒரு ஓட்டலுக்கு சென்ற மாணவர்கள், விழா முடிந்ததும் அங்கு நடனமாடும் நங்கைகளுடன் (போதையுடன்)நடனமாட போட்டி போட்டுகொண்டு சண்டையிட்டதில் பிரச்சனையாகி போலீசார் தலையிட்டு கைது படலம் வரை சென்றிருக்கிறது.
கடந்த காலங்களில் , ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒரு ஆசிரியையை கொலை செய்தது மற்றும் தன்னுடன் படிக்கும் மாணவியை நான்கு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து குளிர்பானத்தில் போதை மருந்தை கலக்கி பாலியல் பலாத்காரம் செய்தது. இப்படி எத்தனையோ விசயங்களை நாம் தினசரி செய்திதாளில் படித்திருக்கிறோம்.
நம்முடைய விஞ்ஞானம் எவ்வளவு முன்னேருகிறதோ அவ்வளவும் மாணவர்கள் செய்யும் குற்றங்களும் முன்னேறி வருகிறது.டிவி, இன்டர்நெட், மொபைல் போன் போன்றவற்றை, மாணவ, மாணவியர் ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பயன்படுத்துகின்றனரா என்பதை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து, பாக்கெட் மணியும் அதிகம் கொடுக்கக் கூடாது.
நீதி கதைகள், யோகா, கவுன்சலிங் போன்றவை, பள்ளிகளில் வாரந்தோறும் நடத்தப்பட வேண்டும். மதிப்பெண் பெறுவது மட்டுமே வாழ்க்கையாக இல்லாமல், அதற்கு மேலே மனிதன் பெற வேண்டிய வேறு சில விஷயங்களையும், அறிவுரைகளும் ஆசிரியர்கள், மாணவ சமுதாயத்திற்கு போதிக்க வேண்டும்.
இன்று, கல்வி முற்றிலும் வியாபாரமாகி, மனிதன் இயந்திரமயமாகி, மாணவ செல்வங்களை மதிப்பெண் பெரும் இயந்திரங்களாக மாற்றி விட்டதால் தான் இந்த குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் உணரவேண்டும் நம்முடைய அரசும் இதற்கு தகுந்தவாறு பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்து மாணவ செல்வங்களின் எதிர்காலம் பொற்காலமாக அமையும்.