தமிழ் வலைப்பூக்கள்
தமிழில் சிலரின் கருத்துக்கள், படைப்புகள், படங்கள் என்று சிலரால் வலைப்பதிவு செய்யப்படுகின்றது. தனியார் நிறுவனங்கள் இதற்கான வலைப்பதிவு இட வசதிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. தமிழில் செய்யப்படும் இந்த வலைப்பதிவுகளைத் தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogs) என்கிறார்கள்.
இந்தத் தமிழ் வலைப்பூக்கள் தமிழர் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பூகோள ரீதியாக எந்தப் பிரச்சனையுமில்லாமல் தமிழர்கள் நண்பர்கள் வட்டம் அமைத்துக் கொள்கிறார்கள். நிறைய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்குகிறார்கள்,பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் அவர்கள் விரும்பும்போது மட்டும் வலைப்பதிவு செய்யப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் கருத்துக்களை உலகளாவிய தமிழ் மொழி தெரிந்தவர்களுடன் இணையத்தின் வாயிலாகப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
இலவச இட வசதி
தமிழ் வலைப்பூக்கள் அமைக்க விரும்புபவர்கள் முதலில் அதற்கான தலைப்பைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தலைப்பு வலைப்பூ அமைக்க விரும்புபவரின் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தத் தலைப்புப் பெயரிலேயே இணைய முகவரிக்கான பெயராகவும் தேர்வு செய்து கொள்ளலாம். வலைப்பூக்கள் அமைப்பதற்கான இலவசச் சேவையை
- பிளாக்கர்ஸ்.காம் (http://www.blogger.com)
- வேர்டுபிரஸ்.காம் (http://www.wordpress.com)
போன்ற இணையச் சேவை நிறுவனங்கள் அதிகமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவை தவிர வேறு சில இணையச் சேவை நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு இடவசதியை அளித்து வருகின்றன. இவைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து அந்த நிறுவனங்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புதல் அளித்து இலவச இடவசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
படிம அச்சுக்கள்
வலைப்பூ அமைப்பதற்கான பக்கங்களுக்கான வடிவமைப்பின் படிம அச்சுக்கள் (Template) இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இந்த சேவை அளிக்கும் நிறுவனத்திடம் இருந்து இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொண்டு அப்படியே சிறு மாற்றங்கள் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இலவச படிம அச்சுக்கள் என்பதை ஆங்கிலத்தில் Free Template for web pages என்று தேடுபொறிகளில் (Search Engine) தேடினால் இச்சேவையை வழங்கும் பல நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும். இத்தளங்களுக்குச் சென்று நாம் விரும்பும் வடிவத்தில் இலவச படிம அச்சுக்களுக்கான உரைநடையை (Script) எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வலைப்பூக்கள் அமைப்பு
தமிழ் எழுத்துருக்கள் பல இருந்தாலும் இன்று தரப்படுத்தப்பட்ட ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி நம்முடைய கதை , கட்டுரை , கவிதை அல்லது எந்தக் கருத்துக்களையும் இந்தப் பக்கத்தில் இடுகையாக இடலாம். இந்த இடுகைகளைத் தொடர்ந்து வெளியிடலாம். இந்த இடுகைகளைப் பதிவு செய்த நாள், நேரம், இடுகையிட்டவர் போன்றவைகளை அளிக்கும் வசதிகளும் உள்ளன. இந்த இடுகைகளை மாதம் , வருடம் எனும் பிரிவின் கீழும் அல்லது தனித்தலைப்புகளின் கீழும் சேமிப்பு செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இது முந்தைய பதிவுகளைப் பார்க்க வசதியாக இருக்கிறது.
இந்த தமிழ் வலைப்பூக்களில் ஒவ்வொரு இடுகையின் கீழும் பின்னூட்டம் (Feedback) என்ற தலைப்பில் சொடுக்கினால் அந்த இடுகை குறித்த பார்வையாளர்களின் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பும் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் புகைப்படம் மற்றும் அவர் குறித்த சிறு தகவல்கள் சிறிய அளவில் வெளியிட்டு தனிப்பக்கத்தில் முழுமையாக அளிக்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு வலைப்பூக்களிலும் அவர்களுக்குப் பிடித்தமான மற்ற தமிழ் வலைப்பூக்கள் மற்றும் இணைய இதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ”மிகை வாக்கியக் குறிப்பு மொழி” (HTML-Hyper Text Markup Language) எனும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வலைப்பூக்களை மேலும் அழகூட்டவும் கூடுதல் வசதிகளை அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
திரட்டிகள்
வலைப்பூக்களில் வெளியாகும் சில சிறப்பான படைப்புகளைத் திரட்டித் தரும் சில தமிழ்த்தளங்கள் இருக்கின்றன. இவைகளில்
- தமிழ்மணம் (இணைய முகவரி: http://www.tamilmanam.net)
- திரட்டி.காம் (இணைய முகவரி: http://www.thiratti.com)
- தகவல் இன்போ (இணைய முகவரி: http://www.thakaval.info/blogs)
- தேன்கூடு (இணைய முகவரி:http://www.thenkoodu.com)
- தமிழ்வெளி (இணைய முகவரி: http://www.tamilveli.com)
- சங்கமம் (இணைய முகவரி:http://tamil.blogkut.com)
- தமிழ்பாரதி (இணைய முகவரி: http://www.thamizhbharathi.com)
போன்றவை குறிப்பிடத்தக்கது.
வலைப்பூக்களின் பயன்கள்
தமிழ் மொழியில் வெளியிடப்படும் வலைப்பூக்கள் உலக அளவில் சாதி, மதம், நாடு எனும் எல்லைகளைக் கடந்து தமிழர் எனும் ஒரு இன உணர்வைத் தோற்றுவிப்பதுடன் அவர்களுக்குள் ஒரு புதிய நட்பு வட்டத்தை உருவாக்குகிறது. மேலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. தனிமனிதக் கருத்துக்கள் கூட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இன்று தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வணக்கம் நண்பரே!
ReplyDeleteபுதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc
(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)
நல்ல பதிவு! http://www.thamizhbharathi.com என்னும் சுட்டியை ஆய்ந்து போடுங்கள்... சரியான இணையத்தளமாகத் தெரியவில்லை. www.thenkoodu.com எனத் தட்டினால் அப்படி ஒரு இணையத்தளமே இல்லை என வருகிறது... ஒருவேளை .in ஆக இருக்கலாம்...
ReplyDelete