Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/28/2010

இவரை தெரிந்துகொள்வோம் - சேர் பொன்னம்பலம் இராமநாதன் .

சேர் பொன்னம்பலம் இராமநாதன் (1851 - 1930)

 இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் உயர் கல்வியும், பின்னர் கொழும்பில் சட்டக் கல்வி பயின்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர், பின்னர் சட்டமா அதிபராகப் பதவிவகித்து ஓய்வு பெற்றார். 1879 இல் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 இல் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1921 இல் பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவினார். கொழும்பு பொன்னம்பலவாணேசர் கோயிலை 1912 இல் கட்டினார். 

வாழ்க்கை வரலாறு

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார்.

அரசியல் சேவை

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார்.

சமூக சேவை

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது.

சமய சேவை

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார்.

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.
1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார்.
யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இவரது நூல்கள்

  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898)
  • An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902)
  • The Culture of the Soul Among Western Nationals (1907))
  • The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905)
  • On Faith or Love of God (1897)
  • பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914)
  • திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919)
  • ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம்.

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"