வரும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். திமுகவுக்கு சட்டசபையில் 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் தேமுதிகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இம்முறை கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தேமுதிக ஆதரவளித்தார்ல் அடுத்த ஆண்டு விஜயகாந்தின் மச்சான் சதீஷுக்கு திமுக ஆதரவளிக்கும் என்பதுதான் பேரம். ஆனால் விஜயகாந்தோ இம்முறை சுதீஷ் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தற்போதைய நிலையில் 18 எம்.எல்.ஏக்கள்தான் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் பேசாமல் தேர்தலையே புறக்கணித்துவிட்டால் என்ன? என்ற யோசனையில் இருக்கிறதாம் தேமுதிக..
இதை உணர்ந்து கொண்ட திமுக, தங்களுக்குத் தேவையான 11 எம்.எல்.ஏ.க்களை எப்படிப் பெறுவது என்று போட்டுப்பார்த்த கணக்கில் உதயமானது பாமக, காங்கிரஸ், புதிய தமிழகத்தை இணைத்துக் கொள்வது என்பதுதான் அது.
காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள், பாமகவுக்கு 3 எம்.எல்.ஏக்கள், புதிய தமிழகத்திடம் 2 எம்.எல்.ஏக்கள் என 10 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். என்னதான் மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறினாலும் கருணாநிதி கேட்டுக் கொண்டால் காங்கிரஸ் மேலிடம் ஆதரிக்கக் கூடும் என்று திமுக நம்புகிறது.
ரொம்ப தூரம் விலகிப் போய்க் கொண்டிருந்த பாமகவை மரக்காணம் கலவரத்தை முன்வைத்து எட்டிப் பிடிக்க முயற்சித்தது திமுக. இப்போது ராமதாஸ் மருத்துவமனையில் இருக்க இன்னும் நெருக்கமாகிக் கொண்டிருக்கிறது.
பாமக கை கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.