Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/27/2014

யார் இந்த பண்டித மதன் மோகன் மாளவியா ?


ண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகாசபையைத் துவங்கி வைத்தவர். பாகவத சொற்பொழிவுகள் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்த அவர், சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றதோடு நில்லாமல் ஆங்கிலக் கல்வியையும் பெற்றார். பின்னர் அரசாங்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 


இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில், இந்தியர்களுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அவர் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்தது. காங்கிரசின் முக்கிய முகங்களில் ஒருவராக அவர் மாறுவதற்கான வாய்ப்புகளை அது வழங்கியது. ஹிந்துஸ்தான் இதழின் ஆசிரியராக ஆனவர், அதற்குப் பின்னர்ச் சட்டம் பயின்றுவிட்டு திரும்பினார். 



காசியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். பல லட்சம் ரூபாய் நிதியை அலைந்து திரிந்து திரட்டினார். அன்னிபெசன்ட்டும் மத்திய இந்துப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் கனவில் இருந்தார். இரண்டு கனவுகளையும் இணைத்து தனியார் முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி தரும் நிலையமாகப் பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார்கள். 



காந்தியடிகளின் ஒத்துழையாமை போரில் பங்கு பெற்றுச் செயல்பட்டாலும், இஸ்லாமியர்களை இணைத்துக்கொண்டு பணியாற்றும் கிலாபத் இயக்கத்துக்கு எதிராக அவர் இருந்தார். செளரி சௌரா சம்பவத்தால் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபொழுது, அந்தக் காவல் நிலைய எரிப்புச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வாதாடி அவர் மீட்டார்.




ஆங்கிலேய அரசு சட்டசபைகளுக்குள் இந்தியர்களுக்கு இடம் வழங்க ஆரம்பித்த பொழுது அதில் மாளவியாவும் இடம் பெற்றார். உருதுவைப் போலச் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியையும் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் நடைபெற்ற பொழுது அதில் இவர் பங்குகொண்டார். அது அப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசியது.

 காங்கிரசின் சட்டசபைக்குள் நுழைவதில்லை என்கிற காங்கிரசின் முடிவை மறுத்து 1923 சுயராஜ்யக்கட்சியைச் சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோருடன் மாளவியாயும் இணைந்து ஆரம்பித்தார். அடுத்து வந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஐக்கிய மாகாணங்கள், வங்கத்தில் பெற்றார்கள். கிலாபத் இயக்கத்தினரும் முனிசிபல் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியில் இணைந்து வென்றிருந்தார்கள். 


காந்தி-அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் முக்கியப் பங்காற்றினார் அவர். உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நானூறுக்கும் மேற்பட்ட நபர்களோடு சிறை சென்றார் அவர். அதே வருடம், 'இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்', என்கிற திட்டத்தை முன்னெடுத்தார். அதே போல ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் இந்து மதத்துக்குள் சேர்க்க அவர்களுக்கு மந்திர தீட்சை கொடுத்து அவர்களின் ஜாதி போய்விட்டதாக அறிவித்தார் அவர். கலாராம் ஆலயத்துக்குள் இருநூறு தலித்துகள் நுழையும் நிகழ்வை முன்னின்று அவரே நடத்தினார். 



1934-ல் சைமன் கமிஷனுக்குப் போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளைக் கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல், வட கிழக்கு மாகாணத்தைத் தனி மாகாணமாக நடத்துதல், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன. 



இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித் தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு புள்ளி அறிக்கையை உருவாக்கினார். இதற்கு இணையாகக் காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அது! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள். 



இன்னொரு புறம் ஹிந்து மகா சபை, சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். மும்பை காங்கிரஸ் 1934-ல் கூடியது, "காங்கிரஸ் எல்லா மதத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சியாகவே திகழ்கிறது. நாங்கள் தனித்தொகுதிகளை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை." என்றது.

மாளவியா கடுப்பாகி, இது இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் போக்கில் இருக்கிறது என்று தேசிய கட்சியை அதே வருடத்தில் ஆரம்பித்துத் தேர்தலில் நின்று, வெறும் பன்னிரெண்டு இடங்களில் தன் கட்சியை வெல்ல வைத்தார்.
பிரிட்டிஷ் அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றியது மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார். 

தற்போது இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

தகவல் சரவணன்.

2 comments:

  1. மாளவியாவை பற்றி அறிந்து கொண்டேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. தற்போது தான் விருதா...?

    பல தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"