Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/19/2014

மறந்து போன மருத்துவ உணவுகள்

மறந்து போன மருத்துவ உணவுகள்



கொள்ளுப்பொடி

தேவையானவை: கொள்ளு - கால் கிலோ, பூண்டுச் சாறு - 100 மி.லி., காய்ந்த மிளகாய் - 5, மிளகு - 10 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளைச் சுத்தம்செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சாறு முழுவதும் சுண்டிய பிறகு, கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை லேசாக வறுத்து, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும்.
சாதத்தில் சிறிதளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற உணவுப் பொடி.
மருத்துவப் பயன்: உடல் பருமன், வாயுத் தொல்லை, மாதவிடாய் பிரச்னைகளைத் தீர்க்கும்.

இடுப்புக்கு வலு சேர்க்கும் உளுந்துக் களி
உளுந்துக் களி
தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, கறுப்பு உளுந்து - 100 கிராம், மிளகு - 20, சீரகம் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, மாவை சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும். களிப் பதம் வந்ததும் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். இந்தக் களி, கருப்பட்டிப் பாகில் தொட்டுச் சாப்பிட அருமையாக இருக்கும்.
மருத்துவப் பயன்: இடுப்பு எலும்பு வலுப் பெறுவதற்காக, பெண்கள் வயதுக்கு வரும்போது இந்தக் களியைச் செய்து கொடுப்பது வழக்கம். பிரசவத்தை எதிர்கொள்ளும்போது இடுப்புக்கு வலு சேர்ப்பதற்காக இதைப் பெண்களுக்கு செய்து கொடுப்பர். கை, கால், முதுகில் ஏற்படும் வலியையும் போக்கும்.

தூதுவளைத் துவையல்
தேவையானவை: முள் நீக்கிய தூதுவளை இலை - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, சீரகம் - 5 கிராம், உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தூதுவளை இலையை நன்றாக வதக்கவும். அதனுடன் மற்றப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
மருத்துவப் பயன்: சளிப்பிரச்னைக்கு அருமையான மருந்து இது. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, தொண்டைச் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும்.

கருப்பட்டி இட்லி
தேவையானவை: இட்லி அரிசி - கால் கிலோ, கருப்பட்டி - அரை கிலோ, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஊறவைத்து, உப்பு சேர்க்காமல் இட்லி மாவுபோல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மறுநாள் காலையில் மாவில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கருப்பட்டியைக் கெட்டியாகப் பாகு காய்ச்சி, வடிகட்டி மாவில் ஊற்றிக் கிளறவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்தால், கருப்பட்டி இட்லி தயார். இந்த மாவையே பயன்படுத்தி தோசையும் சுடலாம்.
மருத்துவப் பயன்: மூட்டு வலியைப் போக்கும். சோர்வை நீக்கிச் சுறுசுறுப்பு தரும். குடல் புண், வாய்வு, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் நீங்கும்.

3 comments:

  1. அட நல்ல விஷயமாயிருக்கே... நான் என் முக நூலில் பகிர்கிறேன்

    ReplyDelete
  2. அருமையான தகவல் அண்ணே ..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"