கல்லூரியில் நீங்கள் எந்தப் படிப்பு படிக்கிறவராக இருந்தாலும்... அந்தப் படிப்பை படிக்கிற அதேநேரத்தில் இன்னொரு படிப்பையும் நீங்கள் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்தப் படிப்பு உங்களுக்கு கைநிறைய சம்பளமும் தருவதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா?
உங்கள் ஆசையை நிஜமாக்குகிற மாதிரி இருக்கிறது ஒரு படிப்பு. அதுதான், காஸ்ட் அக்கவுன்டிங். இந்தப் படிப்பில் யாரெல்லாம் சேர்ந்து பயிற்சி பெற முடியும், எவ்வளவு கட்டணம் என்பது பற்றி இந்திய செலவினக் கணக்கு கட்டுப்பாடு நிறுவனத்தின் (The Institute of Cost Accountants of India) தென்மண்டலத் தலைவர் பி.ராஜு ஜயரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
''1959-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்புச் சட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல் நிறுவனம். இது 2011 முதல் இந்திய செலவினக் கணக்கு கட்டுப்பாடு நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பில் அடிப்படைநிலை, இடைநிலை, இறுதிநிலை என மூன்று நிலைகளில் பயிற்சி வழங்கப்படும். முதல்நிலை என்பது அடிப்படைநிலை. இதில் சேர்ந்து பயிற்சி பெற பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும். இந்த நிறுவனத்தில் பதிவுசெய்து ஆறுமாத பயிற்சிக்குபின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் நான்கு தாள்கள்கொண்ட இந்த நிலைக்கு வருடத்தில் நான்குமுறை ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும்.
இரண்டாம் நிலையான இடைநிலையில், முதல்நிலையில் தேர்ச்சி பெற்றவர்களும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் நேரடியாக சேர்ந்து பயிற்சி பெறலாம். இந்த நிலைக்கு மொத்தம் 100 மணி நேரப் பயிற்சி தேவைப்படும். இதில் நான்கு பாடங்கள் உள்ளன.
மூன்றாம்நிலை என்பது இறுதிநிலையாகும். இதுவும் இடைநிலையைப் போன்றே பாடத்திட்டங்களை உடையது. தவிர, ஆய்வுக் கட்டுரைகளைக்கொண்ட பகுப்பாய்வுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், இந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் ஆறுமாத நேரடிப் பயிற்சிக்கும் அனுப்பப்படுகின்றனர்.
இந்தப் பயிற்சியானது ஒரு பகுதி நேர பயிற்சிப் படிப்பாகும். இதில் சேர எந்த நிபந்தனையும் இல்லை. கல்லூரி அல்லது பள்ளியில் படித்துக்கொண்டிருப்பவர்கள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்தப் படிப்புக்கு தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி பெறலாம். இடைநிலை மற்றும் இறுதிநிலைக்கான தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்'' என்றவர், மேற்கொண்டு முக்கியமான சில விஷயங்களைப்பற்றியும் சொன்னார்.
''இந்தப் பயிற்சியை நாங்கள் நடத்தும் நேரடி வகுப்புகள் மூலமாகவும், தபால் அல்லது தொலைதூரக் கல்வி மூலமாகவும் பெறும் வசதியும் உள்ளது. இதில் சேர விரும்புபவர் பன்னிரண்டாம் வகுப்பிலோ அல்லது இளநிலை பட்டப்படிப்பிலோ கணக்கியலை பாடமாகப் படிக்காதவராக இருந்தாலும்கூட சேர முடியும். அவர்களுக்கு உதவும்விதமாக ஒரு இணைப்புப் பயிற்சியையும் வழங்குகிறோம். மேலும், நாங்களே முன்னணி நிறுவனங்களை அழைத்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறோம்'' என்றார் ராஜு ஐயர்.
இந்தப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு எந்தமாதிரியான வேலைவாய்ப்புகள் உள்ளன என இந்த நிறுவனத்தின் சென்னைக் கிளையின் டீன் பொன்னுசாமி பேசத் தொடங்கினார்.
''இங்குப் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது குறித்த கவலையே வேண்டாம். ஏனெனில், இங்குப் பயிற்சி பெறும் ஒருவர் ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ அல்லது தனியாகக் குறிப்பிட்ட நபருக்கோ செலவுக் கணக்குத் தணிக்கையாளராகப் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பயிற்சி முடித்துவிட்டு, வீட்டில் இருந்தபடியேகூடத் தங்கள் வேலையைப் பார்க்கும் வசதி இந்தப் பயிற்சியில் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் செலவுக் கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துவருவதால் அரசுத் துறை, வங்கி மற்றும் நிதித் துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகள், உற்பத்தித் துறை போன்றவற்றில் செலவுக் கணக்காளர்கள் பணி அமர்த்தப்படுவது அவசியமாகிறது. இங்குப் பயிற்சிபெறும் மாணவர்கள் செலவின ஆடிட்டர்களாகப் பணிக்கு சேரும்போது, சேரும் நிறுவனத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர்.
சென்னையில் மட்டும் 1,500 மாணவர்கள் நேரடியாகவும், 5,000 மாணவர்கள் தபால் மூலமாகவும் பயிற்சி பெறுகின்றனர். தென்னிந்தியா முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்போ அல்லது காலவரம்போ கிடையாது. இதுமட்டுமின்றி நாங்கள் சில கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து, பட்டப்படிப்போடு ஒருங்கிணைந்த பயிற்சியை அளிக்கிறோம்'' என்றார்.
படிப்புக்குப் படிப்பு, படித்து முடித்தபிறகு நல்ல சம்பளத்தோடு வேலை தருகிற காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பைப் படிக்க பரிசீலிக்கலாமே! நன்றி ச.ஸ்ரீராம்.
காசு கொட்டும் காஸ்ட் அக்கவுன்டிங் - தெரிஞ்சுக்கலாம் வாங்க..
மாணவர்களுக்கு உதவ கூடிய பதிவு. நம் காலத்தில் இப்படி யாரும் சொல்ல நமக்கு இல்லையே என்ற ஏக்கம். இந்தி படித்தோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பது நாடறிந்த உண்மை. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete