Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/24/2014

மங்கள்யான் -இந்தியாவின் மகத்தான சாதனை.


கிராவிட்டி படத்திற்கு ஆன செலவைவிட குறைந்த செலவில் ஒரு விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கே செலுத்தி அதில் வெற்றியும் கண்டு அப்ளாஸ் அள்ளியுள்ளனர் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுமே கொண்டிருந்த பெருமைகளை முறியடித்து முதல் முயற்சியில் சாதித்த நாடு என்ற புதிய சாதைனையை இந்தியா படைக்கப்போகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை உலக நாடுகள் அனுப்ப முயற்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 1960ல் இருந்து சுமார் 40 முயற்சிகள் நடைபெற்று அதில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதற்கு முன் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற 20 நாடுகளை உள்ளடக்கிய  'ஒன்றிணைந்த ஐரோப்பா விண்வெளிக்கழகம்' அனுப்பிய 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' விண்கலம் மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி கண்டது.

ஆசிய பெருந்தலைகளான இந்தியாவும், சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியை தங்கள் கவுரவப்பிரச்னையாகவே கருதுகின்றனர். ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா பல மடங்கு முன்னேறி இருந்தாலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சரிக்கு சமமாகவே பதிலடி தந்து வருகிறது. 2011ல் ரஷ்யா உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய விண்கலம் தோல்வியில் முடிந்தது. ஜப்பானும் இதேபோல் 1998 ஆம் ஆண்டு முயற்சித்து தோல்வி கண்டது.

இதனிடையே சந்திரயான் விண்கலம் கொடுத்த வெற்றி மங்கள்யான் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. மங்கள்யான் குறித்த அறிவிப்பை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் வெளியிட்டார். அதில் இருந்து சுமார் 15 மாத இடைவேளையில் முழு விண்கலத்தையும் உருவாக்கி கடந்த ஆண்டு  நவம்பர் 5ஆம் தேதி அப்போதைய ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உதவியுடன் மங்கள்யான் ஏவப்பட்டது.

மங்கள்யான் திட்டத்தின்  தலைமை அதிகாரி சுப்பையா அருணன்  "சுமார் 15 மாதங்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றியுள்ளேன். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டில் நேரத்தை செலவிட்டேன். என்னை போல  நிறைய பேர் மங்கள்யான் வெற்றிக்காக அயாராது உழைத்துள்ளோம்" என்று  கூறியுள்ளார்.

எப்படி பயணித்தது மங்கள்யான்

கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும் நொடியில் இருந்தே விண்கலம் எந்த நிமிடத்தில் எங்கு இருக்கும்; எந்த நாள் இலக்கை சென்றடையும் என அனைத்திற்கும் நாள் குறிக்கப்படும். ராக்கெட் விண்ணில் பாயத்துவங்கியதும் ஸ்ரீ ஹரிகோட்டா, அந்தமானில் உள்ள போர்ட் ப்ளேர், ப்ருனே, பியாக் போன்ற ஊர்களில் உள்ள நான்கு மையங்களில் இருந்து கண்காணிப்பார்கள். அந்தமான் தாண்டி ராக்கெட் செல்ல துவங்கியதும் 10 நிமிடங்களுக்கு எந்த மையத்துடனும் தொடர்பில் இருக்காது. பின்னர் மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேல் பாயும்பொழுது அங்கு இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரு கப்பல்கள் ராக்கெட்டுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

ஒரு கட்டத்தில் ராக்கெட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் பிரிந்துசெல்ல மங்கள்யான் தனது சோலார் பேனல்களை வெளியே கொண்டு வரும். பூமியை சுமார் 6 முறை சுற்றியபின் பூமியின் பாதையை விட்டு விலகி செவ்வாயை நோக்கி சீறிப்பாயத் துவங்கியது. இதற்காக விண்கலத்தில் உள்ள ஏ.எல்.எம் மோட்டார் இயக்கப்பட்டது.  விண்கலம் வேகம் எடுத்தவுடன் இந்த மோட்டார் நிறுத்தப்படும்.

சுமார் 10 மாத காலம் ஒரு நொடிக்கு 22.1 கிலோமிட்டர் என்ற வேகத்தில் பயணித்து நேற்று செவ்வாய் கிரகத்தின் அருகில் சென்றடைந்தது. செவ்வாய் கிரகத்தின் புவியிர்ப்பு விசைக்குள் நுழையும் பொழுது இதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இதை குறைக்க முதலில் 10 மாதங்கள் இயங்காமல் இருந்த  அந்த ஏ.எல்.எம். மோட்டார் இயங்குகிறதா என்று நேற்று மதியம் 2.40 மணியளவில் சோதனை நடைபெற்றது. இந்த திக்திக் சோதனை  சுமார் 4 வினாடிகள்  நீடித்தது. மோட்டார் சரியாக இயங்க துவங்கியதும் இஸ்ரோவிற்கு நாலாபுறமும் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கின. நேற்று நாம் சோதனை நடத்திய அதே வேளையில் நாசாவின் (அமெரிக்கா) மேவன் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் புவீஈர்ப்பு விசைக்குள் நிறுத்தப்பட்டு அதன் ஆராய்ச்சிப் பணிகளை துவங்கியது. ஆனால் அவர்களை விட நாம் குறைந்த செலவில் மங்கள்யானை அனுப்பி புதிய சாதனையை படைத்துள்ளோம்.

என்ன செய்யப்போகிறது மங்கள்யான்

நாளை முதல் தனது பணிகளை துவங்கும்  மங்கள்யான், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கும். அப்படி மீத்தேன் வாயு இருக்கும் பட்சத்தில் அது உயிர்கள் வாழ்ந்ததால் உருவானதா அல்லது இயற்கை பேரழிவுகளின் விளைவால் உருவானதா என்று ஆராயும். அது மட்டுமின்றி அதனுள்ளே பொருத்தப்பட்டுள்ள கலர் கேமரா தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பிகொண்டிருக்கும். இது வருங்காலத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற நடைபெறும் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக அடுத்து செவ்வாய் கிரகத்தில் வேறு ஒரு விண்கலத்தை இறக்கி ஆய்வுகள் நடத்தப்படும். இறுதியாக சுமார் 2030 ஆம் ஆண்டின்  வாக்கில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்.

சரியாக கழிவறை வசதி கூட இல்லாத நாட்டிற்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்  தேவையா என எதிர்ப்புக்குரல்கள் ஒருபுறம் ஒலிக்க, அமைதியாக 450 கோடி செலவில் புதிய சாதனை படைக்க தயாராகிவிட்டனர் நம் விஞ்ஞானிகள். பல ஆயிரம் பேரின் உழைப்பின் அறுவடை நாளை காலை 7.30 மணியளவில் தெரிந்துவிடும். நிலவில் தண்ணீர் இருப்பதை உலகிற்கே எடுத்துக்காட்டிய நாம், செவ்வாயின் ஆச்சர்யங்களை கூடிய விரைவில் கண்டெடுத்து உலகின் முன் வைப்போம் என்பதில் ஐயமில்லை.

தகவல்கள் விகடன் இதழிலிருந்து...

5 comments:

  1. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் புதியதலைமுறை தொலைக்காட்சியில்...

    ReplyDelete
  2. வெற்றி வெற்றி...... சரியாக 8 மணிக்கு... விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது....

    ReplyDelete
  3. விளக்கமான கட்டுரை!

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை. சாதித்து விட்டார்கள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"