சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவி, கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறந்த துயரம் நடந்துள்ளது. பள்ளிக் குழந்தைகளின் உயிர்களைப் பலிவாங்கி, மனதை உறைய வைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகிவருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பள்ளிப் பேருந்தில் இருக்கையின் கீழே இருந்த துவாரத்தின் வழியே மாணவி விழுந்து இறந்த சம்பவம் நிகழ்ந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதேபோல, சென்னையில் உள்ள தனியார் பள்ளி நீச்சல் குளத்தில் விழுந்து மாணவர் ஒருவர் இறந்தார்.
மாணவர்-மாணவிகளின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகத்தினரின் அக்கறையின்மை, அலட்சியம், கவனக்குறைவு போன்றவற்றால் மட்டுமே இத்தகைய விபத்துகள் நேரிடுகின்றன. அவற்றில் சிக்கி மாணவப் பிஞ்சுகள் பரிதாபமாக இறக்கின்றனர்.
புன்னகை சிந்தும் பூமுகத்துடன், தங்களுக்கு கையசைத்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், உயிரற்ற சடலங்களாகக் கொண்டுவந்து கிடத்தப்படுவது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நெஞ்சை வெடிக்கச் செய்யும் வேதனை நிகழ்வுகளாகிவிடும் என்பதை, சம்பந்தப்பட்டோர் கவனத்தில் கொண்டால் இத்தகைய துயரங்கள் நிகழ வாய்ப்பிருக்காது. தங்கள் எதிர்காலமே குழந்தைகள்தான் என நினைத்திருக்கும் பெற்றோரும் இதுபோன்ற அவலங்களுக்கு உள்ளாக வேண்டிய அவசியமிருக்காது.
பள்ளி மாணவ - மாணவி தொடர்புடைய, கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாத வகையில் விதவிதமான விபத்துகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு விபத்தைத் தொடர்ந்தும் அரசும், மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் அதுதொடர்பான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
2004-இல் கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் தீ விபத்து நேரிட்டது. கோர தாண்டவமாடிய தீயின் நாக்குகளுக்கு 94 குழந்தைகள் பலியாயினர். அதையடுத்து, பள்ளிகளில் வகுப்பறைகள் இடநெருக்கடி இல்லாதவாறு, காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
தீப்பிடிக்காத கூரைகள் அமைக்க வேண்டும் என, அந்தத் தீ விபத்து தொடர்பாகவே நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அறிவுறுத்தப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. (அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்-மாணவிகள் வளர்ந்து இளம்பருவத்தினராகி விட்டனர். இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால் அவர்களே பெற்றோர் ஆகிவிடுவார்கள். ஆயினும் வழக்கும், விசாரணையும் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது!)
ஓடும் பேருந்தில் துவாரத்தின் வழியே மாணவி விழுந்து இறந்த வழக்கை நீதிமன்றமே முன்வந்து விசாரணையைத் தொடங்கியதை அடுத்து, பள்ளி வாகனங்கள் தொடர்பாக பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அத்தனைப் பள்ளிகளின் வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கும், சோதனைக்கும் உள்ளாகின. அப்போது, எத்தனைப் பள்ளிகள் எத்தகைய ஏமாற்று வேலைகளையெல்லாம் செய்கின்றன என்பது உலகுக்குத் தெரியவந்தது.
ஆனால், சோதனை நடவடிக்கைகள் எல்லாம் சில மாதங்கள்தான். அதன் பிறகு அவை தொடர்கின்றனவா என்பது அதிகாரிகளுக்கும், விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது பள்ளி நிர்வாகத்தினருக்குமே வெளிச்சம்.
பள்ளி நீச்சல் குளத்தில் மாணவர் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் நீச்சல்குளம் அமைப்பது, பயிற்றுநர் நியமிப்பது, எவ்வாறு பயிற்சியளிப்பது என்றெல்லாம் பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு, பரபரப்பாகப் பேசப்பட்டது - அதுவும், சில மாதங்களே.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் திறந்துகிடந்த கழிவுநீர்த் தொட்டியில் சிறுமி தவறி விழுந்து இறந்துள்ளார். இச் செய்தியைக் கேள்விப்படும் அனைவரின் உள்ளத்தையும் அந்த மரணத்தின் வலி ரணமாய் அறுக்கவே செய்யும் என்றாலும், மற்ற சம்பவங்களைப்போல இச் சம்பவம் அதிகம் பேசப்படவில்லையோ என நினைக்கச் செய்கிறது. காரணம், இச் சம்பவத்தைத் தொடர்ந்து , மற்ற பள்ளிகளிலும் இதேபோல கழிவுநீர்த் தொட்டிகள் திறந்த நிலையில் அல்லது பாழடைந்த நிலையில் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தெரியவில்லை.
பள்ளிக் குழந்தைகளின் நலனிலும், பாதுகாப்பிலும் பள்ளி நிர்வாகத்தினர் மட்டுமன்றி, கல்வித் துறை அதிகாரிகளும் அக்கறை செலுத்த வேண்டும். விபத்துகள் நேரிட்ட பின்பே விழித்துக்கொண்டு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாலோ, நடத்தப்படும் கண்துடைப்புச் சோதனைகளாலோ இழந்த உயிர்களைத் திரும்பப்பெற இயலுமா?
மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத, விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்காத பள்ளி நிர்வாகத்தினர் மீது கல்வித் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அது மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கும். முடிந்தவரை உயிரிழப்புகள் தடுக்கப்படும். மாறாக, பெயரளவு நடவடிக்கைகளால் விபத்துகள் வேறுவேறு வழிகளில் தொடரவே செய்யும். என்ன பெரிதாய் நடந்துவிடும் என மெத்தனப்போக்கு பேர்வழிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும்.
அனைவருமே ஒவ்வொரு விபத்திலிருந்தும் ஒரு பாடத்தை மட்டுமே கற்காமல், ஒட்டுமொத்த பாடத்தையும் கற்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக் குழந்தைகளைப் பலி கேட்கும் விபத்துகளுக்கு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நன்றி தினமணி.
பகிர்வுக்கு நன்றி கருண்
ReplyDeleteஓட்டுனரின் கவனமும், விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே இதுக்கு தீர்வு...
ReplyDeleteஇல்லையேல் இந்த கொடுமை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும்
Good Sharing!
ReplyDeleteஅனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது என்பது எங்கள் அகராதியிலேயே கிடையாதே!
ReplyDeleteபுலம்புபவர்கள் புலம்பிக்கொண்டே இருக்கட்டும்.