உ.பி.,யில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும்(ஆட்டையை போடப்படும்) விளை நிலங்களுக்கு, இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளதென்றும், மேலும் நிலங்களை கையகப்படுத்தாமல் இருக்கவும், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து, விவசாயிகள் தரப்பிலும், காவல் துறையில் சிலரும் உயிரிழந்துள்ளனர். போராட்டம் மேலும் தீவிரமடைந்து, உ.பி.,யின் இதர பகுதிகளுக்கும் பரவியது.
பொதுவாக, இந்தியாவின் உணவுத் தேவை, கிராமப்புறங்களையும், அங்குள்ள பரந்த விளைநிலங்களையும் நம்பியுள்ளது. மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகளும், மத்திய அரசும்,பொருளாதார மண்டலங்களுக்காகவும், விமான நிலையங்கள், குடியிருப்பு விரிவாக்கம், தொழிற்பேட்டைகளை அமைக்கவும், சகட்டு மேனிக்கு விவசாய நிலங்களில் கை வைக்கும் அவலம் தொடர் கதையாக உள்ளது.
மேலும், தண்ணீர் வசதி, வடிகால் வசதி பற்றாக்குறை காரணங்களால், கிராமப்புற நிலங்கள் வெகுவாக, பிளாட் போடப்பட்டு வீடுகளாய் மாறுகின்றன. விவசாயிகளுக்கு தேவைப்படும் நுகர்பொருட்களான, நேர்த்தியான விதைகள், உரங்கள், களைக் கொல்லிகள், பூச்சி மருந்துகள், போதிய அளவு கிடைக்காத காரணங்களாலும், அவர்கள் பெறும் கடன்களை அடைக்க முடியாமல், மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கு தள்ளப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
இதனால், விவசாயம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விதத்தில் நிர்ணயம் செய்யப்படாததும், நவீன விவசாய அறிவியல் முன்னேற்றங்கள், விரைவாக விவசாயிகளை சென்று அடையாததும், அவர்கள் மத்தியில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரம், உரிய நேரத்தில் வழங்கப்படாததும், ஒரு முக்கியமான காரணம். இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய விவசாயிகளுக்கு, தங்கள் நிலங்களில் பயிரிடுவதையே பெரிய பாரமாய் கருதும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய வேலைக்கு சரியான கூலி ஆட்கள் கிடைப்பது இல்லை.