Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/28/2016

பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு,



என் பிள்ளைக்கு இந்த கோர்ஸ் செட் ஆகுமா?, எதுக்கு வேலைவாய்ப்பு அதிகம்?, கேம்பஸ் இன்டர்வியூக்கள் எந்தக் கல்லூரியில் அதிகம் நடக்கிறது?, இந்த கோர்ஸுக்கு எந்தக் கல்லூரியில் படிப்பது நல்லது? இப்படி பல கேள்விகள் பெற்றோரின் மன ஓட்டத்தில் பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

மேலே கூறிய எல்லா கேள்விகளும் கேட்கப்பட வேண்டியவையே, ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி ஒன்று நம் நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை.

"உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?" - வாழ்வை அமைக்கும் கேள்வி அது.

உடை பிடிக்கிறதா, உணவு பிடிக்கிறதா என்ற கேள்விகளை தன் பிள்ளைகளிடம் கேட்கின்ற பெற்றோர்கள் ஏன் 'நீ என்னவாக விரும்புற, உன் ஆசை என்ன?' என்று கேட்பதில்லை.

பிள்ளைகளின் ஆசை என்னவென்றே அறியாமல் முடிவெடுப்பது ஒரு பிழை என்றால், 'தம் பிள்ளைக்கு இது படிக்கத் தான் ஆசை, தம் பிள்ளைக்கு இப்பிரிவில் நிறைய திறமைகள் இருக்கிறது, இவனுக்கு இதை படிக்க வேண்டும் என்று விருப்பம்' இப்படி பிள்ளைகளின் கனவை உணர்ந்தும் பெற்றோர் முரண்பட்ட முடிவை எடுப்பதினை பேதமை என்றே உரைக்கலாம்.

பிடிக்காத ஒரு படிப்பினை நாம் படிக்கும்போது மனதினில் வெறுப்பு தான் ஆட்கொள்கிறது. அப்போது கல்வியும் வெறும் மதிப்பெண்ணை பெற்று வேலையைப் பெறுவதற்கான ஒரு மாற்றுப் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பிடிக்காத படிப்பினை எடுத்து அப்பிரிவிலே வேலைப் பார்க்கப் போகும்பொழுது பார்க்கின்ற வேலையில் பற்றற்று போகின்றது. கடைசி வரை பல பேரின் வாழ்க்கை 'அட்ஜஸ்ட்மென்ட்' என்ற முறையினாலேயே நகர்த்தப்படுகிறது.

யோசித்துப் பார்த்தால் இப்படி வாழ்க்கையை புளிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமாக இருப்பது பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நாம் எடுத்த அந்த ஒரு முடிவு தான்.

குழந்தை எடுத்து வைக்கின்ற முதல் அடி போல் ஒரு கல்லூரி, மற்றும் எடுக்கப்படுகின்ற பிரிவு ஆகியவை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒரு மீனவனின் மகன் எரோனாடிகல் படிக்க வேண்டுமா? அப்படிப் படித்தால் என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? அதற்கு மாறாக கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாமே என்று எண்ணினால் நமக்கு அப்துல் கலாம் எப்படிக் கிடைத்திருப்பார்?

கல்வியின் அடிப்படைத் தேவையை பொருளாதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பிதற்றலானது. இன்று நாம் அனைவரும் வாழக் காரணமாக இருப்பது விவசாயம். ஆனால் விவசாயத்தை பற்றி படிப்பதாக ஒரு மாணவன் கூறினால் சிரிக்கிறார்கள். நம் தேசத்தின் அடையாளமே விவசாயம்தான் என்பதை அறியாதவரின் அறியாமைச் சிரிப்பு இது.

ஒரு பெண் மெக்கானிக்கல், சிவில் படிக்க ஆசைப்படுகிறேன் என்றால் ஏளனமாக சிரிக்கின்றார்கள். கல்பனா சாவ்லாக்களை அறியாதவர்களின் அறியாமைச் சிரிப்பு அது.

மேலும், மீடியா தொடர்பாகப் படிக்கப் போகிறேன், கலைப் பிரிவில் படிக்கவிருக்கிறேன், நர்சிங் படிக்க விழைகிறேன், தமிழ் படிக்க விரும்புகிறேன் என ஒரு மாணவர் கூறினால் அவர் மனக்கோட்டையை சிதைப்பதில் இச்சமுதாயத்திற்கு பெறும் பங்கு இருக்கிறது.

'என் மகன் இந்த காலேஜ்'ல இந்த கோர்ஸ் படிச்சு இப்ப சந்தோஷமாக இருக்கிறான் சின்ன பசங்களுக்கு என்ன தெரியும்? உங்க மகனையும் அதுவே எடுத்து படிக்கச் சொல்லுங்க' இப்படி எதாவது கூறி பெற்றோரின் மனக் குட்டையில் கல்லை எறியும் கூட்டத்தின் தவறான அறிவுரையால் இன்று பல பிள்ளைகளின் வாழ்வியல் பாதிப்படைகிறது, இன்னும் அடைந்து கொண்டே இருக்கிறது.

கல்வியின் அவசியத்தை பாராமல் ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இதைப் போன்ற கமர்ஷியல் கணவான்களின் பேச்சை காதில் போட்டுக் கொள்ள கூடாது.

உண்மையில் எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு வருங்காலத்தை பற்றிய தெளிவான எண்ண ஓட்டம் இல்லை என்று கூறுபவர்கள் கண்டிப்பாக பெற்றோர்களின் அறிவுரையை எடுத்துக் கொள்ளலாம், தவறே இல்லை. அப்படி எடுத்துக் கொண்ட பாதையில் தன் திறமையை உணர்ந்து சாதித்தவர்கள் பலர்.

எனக்கு இது தான் ஆசை, இது தான் விருப்பம், இதில் நான் கண்டிப்பாக சாதிப்பேன் என்ற மன உறுதி கொண்டவர்கள் கண்டிப்பாக தன் வேட்கையை பெற்றோர்களிடம் உரைத்து அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களின் நிலைப்பாட்டை உங்கள் பெற்றோர்களிடம் உங்களால் விளக்க முடியவில்லை என்றால் எப்படி வெளியுலகிற்கு புரியவைப்பீர்கள்?

விருப்பமில்லாத படிப்பை படித்து நீங்கள் உங்கள் வாழ்வை மட்டும் சிதைத்துக் கொள்ளவில்லை, அப்படிப்பு படிக்க தீவிரமாக முயற்சித்த மற்றொரு மாணவனின் கனவையும் சேர்த்து சிதைக்கின்றீர்கள். நான் இது தான் படிக்கப் போகிறேன் என் ஆசை இது என்பதை கேட்பவர்களிடம் ஆணித்தரமாக சொல்லுங்கள் அப்படிச் சொல்கையில் உங்களுள்ளே தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட பாதையில் வெற்றி பெறுவதற்கான வேட்கை கூடும்.

நான்கு வருடம் முடித்துவிட்டு நான் இன்ஜினியரிங் படித்திருக்கக் கூடாது என்றுணரும் பொறியியலாளர்களும், ஆறரை வருடம் கழித்து மருத்துவம் படித்திருக்கக் கூடாது என்றுணரும் மருத்தவர்களும் நம் ஊரில் ஏராளம். படிக்கையில் இனிமேல் எனக்கு இது ஒத்துவராது என்று பாதி வழியிலே விலகிக் கொண்டவர்களும் ஏராளம்.

தன் காதலை இழந்துவிட்டோம் என்று மேசையில் தலை சாய்த்து அழுபவர்கள், பேருந்தில் ஜன்னலிலே சாய்ந்து கொண்டு விழி நீர் இறைப்பவர், மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு தன் கையாலாகத் தனத்தை உணர்ந்து தனிமையில் அழுபவர்கள் நம் நாட்டில் பலர் உள்ளனர்.

தன் பிள்ளை விழுந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சி அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வுணர்ச்சியே அவர் பிள்ளைகளின் வாழ்விற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடக் கூடாது. யாரோ மூன்றாவது நபர் கூறும் பேச்சிற்கு மதிப்பளிக்கும் நீங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆசைக்கும் கொஞ்சம் மதிப்பளியுங்கள். அப்படியே அவர்கள் எடுத்துக் கொண்ட பாதையில் விழுந்தால் கூட வீழமாட்டார்கள் எழுந்து கொள்வர் ஏனென்றால் இது அவர்கள் எடுத்த முடிவு என்ற அச்சமும், கடமையும் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

பசி இழந்து, உறக்கம் இழந்து, சுகவாசத்தை இழந்து, பொழுது போக்கினை இழந்து நாளும் பிள்ளைக்காகவே வாழ்ந்து தேயும் பெற்றோர்களே... உங்களின் ஆசை எல்லாம் உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தானே! அப்படி இருக்கையில் ஒரு முறை உங்கள் பிள்ளைகளின் ஆசையை கேளுங்கள். கண்டிப்பாக எந்த பிரிவு எடுத்தாலும் அதில் காதல் இருந்தால் சாதிக்கலாம்; சாதித்தவர்களும் பலர். உங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் பிரிவில் சாதித்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா படிப்பிற்கும் அவசியம் உண்டு, எல்லோர் வாழவும் வழியுண்டு. என்ன, கொஞ்சம் தேட வேண்டும் அவ்வளவே.

ஆயிரத்து நூற்றிக்கு மேல் மதிப்பெண் எடுத்தால் ஆர்ட்ஸ் படிக்கக் கூடாதா என்ன? ஆயிரத்து நூறு மதிப்பெண் மேல் எடுத்து பிடிக்காத பிரிவில் படித்து சரிந்தவர்களும் இருக்கின்றனர், அறுநூறு மதிப்பெண் எடுத்து வாழ்வில் சாதித்தவர்களும் பலர் உள்ளனர். பெயர் பெற்ற கல்லூரியில் பிடிக்காத பிரிவை எடுத்துப் படிப்பதை விட சுமாரான கல்லூரியில் பிடித்த படிப்பை படிப்பதே மேலானது.

ஒரு சிறிய விண்ணப்பம்.. மதிப்பெண் வெளிவந்துவிட்ட நிலையில், "அய்யய்யோ.. இயற்பியல்ல பத்து மார்க் குறைஞ்சிடுச்சி, வேதியல்ல இரண்டு மார்க் போச்சு..."

இந்தக் கவலையை எல்லாம் விடுங்கள். உங்கள் பிள்ளை என்ன மதிப்பெண் எடுத்திருந்தாலும், அது அவரின் உழைப்பு. அந்த உழைப்பிற்கு மதிப்பளித்து தேர்வு முடிவு வரும் வரை காத்திருங்கள். நன்கொடை கொடுத்து படிக்கப்படும் படிப்பு அறிவை வளர்ப்பதை விட அச்சத்தைத்தான் வளர்க்கும்.

பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்ற உங்கள் அன்பு புரிகிறது. அப்படியே உங்கள் பிள்ளைகளின் மனதையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, அவர்களின் எதிர்காலத்திற்கு 'முடிவாக' இல்லாமல் நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்தப் புலம்பல்கள், பெற்றோர்கள் பலருக்கும் 'மொக்கை' கடிதமாகத் தெரியலாம். ஆனால், சில பல ஆண்டுகளுக்கு முன்பு கிரியேட்டிவ் ஃபீல்டில் நுழைவதற்காக ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்த ஒரு பிளஸ் 2 மாணவன், நிர்பந்தத்தின் காரணமாக வேறு படிப்பு படித்து, இப்போது ஓர் ஐ.டி. நிறுவனத்தில் போதுமான ஊதியத்துடன் வெறுமையான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கிறான். வெளியுலகுக்கு பந்தாவானவனாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் நொந்தவனாகவும் இருக்கும் இந்த நிலை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கும் வேண்டுமா?

ஹரி - nanaprabhu5591@gmail.com

2 comments:

  1. பயனுள்ள பதிவு. நிறைய மாணவர்களுக்கு இந்தக்காலத்தில் அடுத்து இன்னதைத்தான் படிக்க வேண்டும் இப்படித்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணங்கள் ஏதும் இருப்பதில்லை. ப்ளஸ்டூவில் நல்ல மார்க், அடுத்து கேம்பஸ் இன்டர்வியூ வரக்கூடிய பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன், அப்புறம் வேலை, ஆன்சைட்... இப்படியே சென்று விடுகிறது.

    ReplyDelete
  2. /// உங்களின் நிலைப்பாட்டை உங்கள் பெற்றோர்களிடம் உங்களால் விளக்க முடியவில்லை என்றால் எப்படி வெளியுலகிற்கு புரியவைப்பீர்கள்...? ///

    சரியான, சிந்திக்க வேண்டிய கேள்வி...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"