இயக்குனர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாது சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை விஜயலட்சுமி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சீமானின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக இந்த சதியை நடத்துகிறார்கள் என்றும் உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது என்றும் சீமான் தரப்பில் சொல்லப்படுகிறது.
இது குறித்து சீமான் நேரில் விளக்கம் அளித்தால் தெளிவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இதனை அடுத்து ஒரு பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்திருக்கும் சீமான், காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கிறேன்? ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்கு போராடவும் ஈழப் படுகொலைகளை செய்தவர்களுக்கு எதிராக பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை.
படிக்கவும் தூங்கவும் நேரம் இல்லாத எனக்கு கண்டவர்களோடு டூயட் பாடுவது தான் வேலையா? ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்... என்று சீறுகிறார் சீமான்.