நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் அவர் திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
6 மாதங்களுக்கு முன்பு அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார். இதன் பிறகு சிரஞ்சீவி கடந்த 3 மாதங்களாக திருப்பதி தொகுதிக்கு வரவில்லை. இந்நிலையில் திருப்பதி கால்நடை மருத்துவ கல்லுரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான சிரஞ்சீவியை சந்தித்து தங்கள் கோரிக்கை பற்றி மனு கொடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர் கடந்த 3 மாதங்களாக தொகுதி பக்கமே வராததால் ஆவேசம் அடைந்தனர்
இதையடுத்து அவர்கள் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை. அவரை கண்டு பிடித்து தாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர்களிடம், உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மாணவர்கள் திருப்பதி நகரம் முழுவதிலும், திருப்பதி எம்.எல்.ஏ. சிரஞ்சீவியை காணவில்லை. அவரை கண்டு பிடித்து கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் செய்தியை படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது ஏன் எனில் இதே நம்ம ஊர் என்றால் இதுவரை எத்தனை புகார்கள் சேர்ந்திருக்கும் என நினைக்கும் போது வேறு என்ன வரும் சொல்லுங்கள் நண்பர்களே?