Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/20/2013

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல்



திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த 9 வருடக் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று முன்தினம் காலையில் மத்திய அரசுக்கு இலங்கை
விவகாரத்தில் சில புதிய நிபந்தனைகளை திமுக தலைவர் கருணாநிதி விதிக்க, மாலையில் விமானப் படையின் சிறப்பு விமானத்தில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி ஆகியோர் சென்னைக்கு ஓடி வந்தனர். அப்போதே திமுக-காங்கிரஸ் இடையே உறவு படுபாதாளத்துக்குப் போய்விட்டதை நிருபர்கள் உணர்ந்தனர். 

நாளை காலையில் ஏதாவது முக்கிய மாற்றம் வரும் என்று சொல்லிக் கொண்டே தான் 18ம் தேதி இரவு கருணாநிதியின் சிடிஐ காலனி வீட்டிலிருந்து நிருபர்கள் கலைந்து சென்றோம்.

நினைத்தது போலே 19ம் தேதி காலை, நேற்று காலை, கருணாநிதி பிரஸ்மீட் என்று தகவல் வந்தபோது, கூட்டணி பணால் ஆகப் போகிறது என்று பேசிக் கொண்டே தான் நிருபர்கள் அண்ணா அறிவாலயத்துக்குள் வந்தனர். அதே போல மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ், அமைச்சர்கள் ராஜினாமா செய்வர் என்று கருணாநிதி அறிவித்தார். வழக்கம் போலவே மிக ஜாலி மூடிலும் இருந்தார். 

அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் திமுகவின் நிலையில் மாற்றம் இருக்குமா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, வரட்டும் பார்க்கலாம் என்று பதிலளித்தார் கருணாநிதி. இதையே தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பிடியாக நினைத்துக் கொண்ட காங்கிரஸ், தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக ப.சிதம்பரம் மூலமாக அறிவித்தது.

ஆனால், கூட்டணியை விட்டு வெளியேறுவதிலேயே தீவிரமாக இருந்ததாலும், தீர்மானம் கொண்டு வந்து இதனால் கூட்டணியில் நீடிக்க வேண்டிய நிலை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதாலும், நேற்று மாலையே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வாங்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு உத்தரவிட்டார். 

உடனடியாக அப்பாயிண்ட்மென்ட் வாங்கிய டி.ஆர்.பாலுவிடம், திமுகவின் 18 லோக்சபா எம்பிக்களையும் ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று ஆதரவு வாபஸ் கடிதத்தைத் தரச் சொல்லி உத்தரவிட்டார் கருணாநிதி. இரவோடு இரவாக ஆதரவு வாபஸ் ஆனது. கூட்டணியை விட்டு கருணாநிதியே போய்விட்ட பிறகு இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்ற முடிவுக்கு நேற்றிரவே வந்துவிட்டது காங்கிரஸ் தலைமை. இது குறித்து சோனியா, பிரதமர், சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி, அனாவசியமாக இலங்கையை கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர். 

இதனால் தீர்மானம் வேண்டாம் என்ற முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கான காரணமாக, எல்லா கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை என்ற நொண்டிச் சாக்கு கூறப்பட்டுவிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதைக் காட்டிக் கொண்டாக வேண்டிய அவசியத்தை சிதம்பரம் வழியுறுத்தியதால், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் மட்டும் சில திருத்தங்களைக் கொண்டு வரச் செய்வது என்றும், பின்னர் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது என்றும் முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

 இந்தத் திருத்தங்கள் வந்தால் கூட இலங்கைக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பதே உண்மை. காரணம், அந்த அளவுக்கு அமெரிக்காவின் தீர்மானத்தில் ஏற்கனவே இந்தியாவின் முயற்சியால் (குறிப்பாக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்) முடிந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டு, இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டுவிட்டன. 

இதனால் தீர்மானத்தை இனி இந்தியா ஆதரித்தால் கூட இலங்கை கவலைப்படாது. ஆக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோமே என்று கூறி மத்திய அரசு தமிழர்களை ஏமாற்ற முயலும். அதே நேரத்தில் ஏதோ இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு வந்ததாக திமுக தன்னை தியாகியாகக் காட்டிக் கொள்ள முயலும்.

மொத்தத்தில் திமுகவை கூட்டணியில் நீடிக்கச் செய்யும் காங்கிரஸ் முயற்சிகள் தோற்றுவிட்டதே உண்மை. இதனால், அடுத்து இரு கட்சிகளும் நேரடித் தாக்குதலில் இறங்கப் போகின்றன. இனி, சிதம்பரம் மூலமாக கருணாநிதியையும் திமுகவையும் காங்கிரஸ் தாக்க ஆரம்பிக்கும். பதிலுக்கு கரைவேட்டிகள் களமிறங்குவார்கள். இந்தப் பிரச்சனையின் உண்மையான பின்னணி குறித்த காரணம் என்னவோ அந்த '(2)ஜி'களுக்கு, அதாங்க சோனியாஜி, கருணாநிதிஜி, மட்டுமே தெரியும்! - Thangs Thats tamil .

3 comments:

  1. நாளை அந்தர் பல்டி கூட ஆகலாம்...

    ReplyDelete
  2. \\ஆக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோமே என்று கூறி மத்திய அரசு தமிழர்களை ஏமாற்ற முயலும். அதே நேரத்தில் ஏதோ இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு வந்ததாக திமுக தன்னை தியாகியாகக் காட்டிக் கொள்ள முயலும்.\\ எப்படியெல்லாம் சீன் போட்டு எமாத்துரானுங்கப்பா.................

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"