Ads 468x60px

1/12/2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?


ஜனவரி 12: இந்தியா - தேசிய இளைஞர் நாள்
                         1863 - சுவாமி விவேகானந்தர் பிறப்பு.



இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.
  
இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும். 

மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா! நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும்.

 
குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா?


திரைப்பட நாயகர்களுக்கு "ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. 

இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர். 

மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். ""இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை. 


நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. 



நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா? ""இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்...'' என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர். 

வீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது.

விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். "சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; 

 
எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், "தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. 




இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், "இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். 

கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான "பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! 


"இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்'' என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான். 



இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. 


இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். 

இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும். "இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி.


பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள்.(நன்றி தினமணி).

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

9 comments:

  1. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்கள் பதிவுக்கு நன்றி
    உண்மையில் இப்படைதோற்பின் எப்படை வெல்லும்...

    ReplyDelete
  2. விவேகானந்தர் பற்றி சரியான தருணத்தில் நினைவு கூறி உள்ளீர்கள்!!

    ReplyDelete
  3. பொருத்தமான நேரத்தில், பொருத்தமான கட்டுரை போட்டுள்ளீர்கள் நண்பா! சக மனிதர்களை சகோதரனே, சகோதரியே என்று அழைக்கும் வழக்கத்தை மேற்கு நாட்டவர்களுக்குப் புரியவைத்த ஒரு மகனை எப்படி நாம் மறப்பது? நன்றி உங்கள் பதிவுக்கு!!

    ReplyDelete
  4. இப்படைதோற்பின் எப்படை வெல்லும்...

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.... உங்களுக்கும் என்னுடைய இளைஞர் தின வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  6. இளைஞர் தினம்...!
    இது எத்தனை இளைஞர்களுக்கு தெரியும் நண்பா...?
    இந்தியாவின் இளைய சக்தி வீணடிக்கப் படுகிறது...!
    அந்த மகானின் வார்த்தைகள் இன்னும் வார்த்தைகளாகவே....!
    இந்தியா விழித்துக் கொள்ளுமா...!

    பகிர்வுக்கு நன்றி கருண்...!

    ReplyDelete
  7. இளைஞர் தினம்...!
    இது எத்தனை இளைஞர்களுக்கு தெரியும் நண்பா...?
    இந்தியாவின் இளைய சக்தி வீணடிக்கப் படுகிறது...!
    அந்த மகானின் வார்த்தைகள் இன்னும் வார்த்தைகளாகவே....!
    இந்தியா விழித்துக் கொள்ளுமா...!

    பகிர்வுக்கு நன்றி கருண்...!

    ReplyDelete
  8. தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
    - விவேகானந்தர்.
    இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
    விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

    ReplyDelete
  9. எதெதுக்கோ ”தினங்கள்” கொண்டாடுபவர்களுக்கு இளைஞர் தினம்பற்றி
    ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"